நடிச்ச படம் ரிலீஸ் ஆகாத வேதனை எனக்கும் நடந்திருக்கு.. மத கஜ ராஜா பற்றி மனம் திறந்த வேம்புலி!
சென்னை: மனுஷன் இத்தனை படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடிச்சதுக்கு அப்புறம் தான் வேம்புலியா விஸ்வரூபம் எடுத்திருக்காரு என நினைக்கும் போதே தனி மரியாதை உண்டாகிறது.
Recommended Video
வாரிசு நடிகர்களுக்கு உடனடியாக கிடைக்கும் வாய்ப்பு திறமையான கலைஞனுக்கு காலம் சென்று தான் கிடைக்கும் என்பதற்கு நடிகர் ஜான் கோக்கனும் சமீபத்திய உதாரணமாக திகழ்கிறார்.
விஷாலின் மத கஜ ராஜா படத்தில் நடித்த ஜான் கோக்கன் அந்த படம் ரிலீசாகாதது பற்றி மனம் நொந்து பதிவிட்டுள்ள ட்வீட்டும் வைரலாகி வருகிறது.

சைடு ரோல்
சினிமா சிலருக்கு சீக்கிரமே பெரிய ரோல் கொடுத்து விடும். ஆனால், பலருக்கும் அது அவ்வளவு எளிதாக வாய்ப்புகளை வாரி வழங்கி விடுவதில்லை. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி எனும் வேத வாக்கு நம்ம 'வேம்புலி' ஜான் கோக்கனுக்கும் கச்சிதமாக பொருந்தியுள்ளது. பல படங்களில் சைடு ரோல்களில் தான் நடித்த அனுபவங்களை ஒவ்வொரு ஸ்க்ரீன் ஷாட்டாக வெளியிட்டு ஷேர் செய்து வருகிறார் நடிகர் ஜான் கோக்கன்.

ஒஸ்தி படத்துல இருந்தே
சிம்புவின் ஒஸ்தி, அஜித்தின் வீரம் என பல படங்களில் அடியாளாகவும் சிறு சிறு வேடங்களிலும் தொடர்ந்து நடித்து வந்த நடிகர் ஜான் கோக்கனுக்கு சார்பட்டா பரம்பரை படம் மிகப்பெரிய வெற்றியை பரிசளித்துள்ளது. ஜான் கோக்கன் எனும் அவரது பெயரையே மறக்கடிக்கும் அளவுக்கு வேம்புலியாகவே கோலிவுட் ரசிகர்கள் மனதில் குடிகொண்டு விட்டார்.

தல தான் இன்ஸ்பிரேஷன்
தல அஜித்தின் வீரம் படத்தில் வில்லனின் அடியாளாக நடித்திருந்த ஜான் கோக்கனுக்கு நடிகர் அஜித் சொன்ன அட்வைஸ் தான் மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருந்ததாக வார்த்தைக்கு வார்த்தை அஜித்தின் புகழ் பாடி தான் இந்த நிலைமைக்கு இன்று வர தன்னை ஊக்கப்படுத்திய மனிதரை மறக்காமல் நன்றி தெரிவித்து வருகிறார்.

காலகேயர்கள் கூட்டத்தில்
பாகுபலி படத்தில் காலகேயர்கள் கூட்டத்தில் கூட்டமாக கருப்பு மேக்கப்பை போட்டுக் கொண்டு அடையாளமே தெரியாத நபராக தான் நடித்த அனுபவங்களையும் தற்போது ட்வீட் போட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் ஜான் கோக்கன். கேஜிஎஃப் படத்திலும் ஜான் கோக்கன் மிரட்டி இருப்பார்.

மகேஷ் பாபு படத்தில்
டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் மகரிஷி படத்தில் கண் சிமிட்டும் நேரத்தில் மறைந்து விடும் காட்சியில் கோட் சூட் போட்டுக் கொண்டு நடித்திருப்பேன் என்றும் அந்த படத்தின் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நம்ம வேம்புலி.

ரிலீசாகாத மத கஜ ராஜா
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி மற்றும் சந்தானம் நடிப்பில் உருவான மத கஜ ராஜா படத்தின் டிரைலர் வெளியான நிலையில், அந்த படம் அப்படியே ரிலீஸ் ஆகாமல் முடங்கிப் போனது. அந்த படத்திலும் நடிகர் விஷால் உடன் தான் இணைந்து சண்டைக் காட்சி ஒன்றில் நடித்துள்ளேன் என ஸ்க்ரீன் ஷாட்டை ஷேர் செய்துள்ளார் ஜான் கோக்கன்.

அந்த வலி
ஒரு படம் ஹிட்டாகும் வசூலை குவிக்கும் என நன்றாக நடித்து அந்த படம் ரிலீசாகாத வேதனை ஒவ்வொரு நடிகருக்கும் எந்தளவுக்கு வலியை தரும் என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன் என மத கஜ ராஜா படம் ரிலீஸ் ஆகாதது குறித்து உருக்கமாக ட்வீட் போட்டுள்ளார்.

சார்பட்டா பரம்பரை தான்
எத்தனையோ படங்களில் இத்தனை ஆண்டுகளாக தென்னிந்திய சினிமா பலவற்றில் நடித்திருந்தாலும், என்னை ஒரு நல்ல நடிகனாக பார்த்து வாய்ப்பு கொடுத்தது இயக்குநர் பா. ரஞ்சித் தான். சார்பட்டா பரம்பரை தான் எனக்கு இனி என்றுமே அடையாளம். இனி வரும் வாய்ப்புகள் நல்லதாக அமையும் என எதிர்பார்க்கிறேன் என சினிமாவில் சாதிக்க தான் போராடிய ஒவ்வொரு நாட்களையும், ஒவ்வொரு படத்தையும் நினைத்து பார்த்து ரசிகர்களுக்கும் சினிமா ஆசையோடு போராடும் கலைஞர்களுக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக மாறி உள்ளார் நம்ம வேம்புலி.


Click it and Unblock the Notifications











