"வாழ்நாள் முழுவதும் நீங்கள் எங்களுடன் இல்லாத வலியில்..." ஜான் மகேந்திரனின் கண்கலங்க வைக்கும் டிவீட்
சென்னை: இயக்குனர் மகேந்திரனின் மறைவு குறித்து அவரது மகன் ஜான் மகேந்திரன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கியதற்காக என்றும் புகழப்படுபவர் இயக்குனர் மகேந்திரன். அவர் இயக்கிய முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள் உள்ளிட்ட படங்கள் காலத்தால் அழியாதவை.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மகேந்திரன், சென்னையில் நேற்று காலை காலமானார். திரையுலகினரின் அஞ்சலிக்கு பிறகு, மந்தவெளி செயின்ட் மேரியில் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தந்தையின் பிரிவு குறித்து, உருக்கமான பதிவு ஒன்றை அவரது மகன் ஜான் மகேந்திரன் வெளியிட்டுள்ளார். அதில், "அப்பா...இனி நீங்கள் கால் வலியில் துடிக்க போவதில்லை..முதுகு வலியில் கஷ்டப்பட போவதில்லை..ஆனால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் எங்களுடன் இல்லாத வலியில் நாங்கள் துடிக்க போகிறோம்", என அவர் வேதனைப்பட்டுள்ளார்.
ஜான் மகேந்திரனின் இந்த டிவீட்டை பார்த்து பலரும் கண்கலங்கினர். சிறந்த இயக்குனர் என்பதையும் தாண்டி, தான் ஒரு சிறந்த தந்தை என்பதையும் மகேந்திரன் நிரூபித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











