அடக்கடவுளே.. லண்டனிலேயே ஜோஜு ஜார்ஜிடம் கைவரிசை காட்டிய திருடர்கள்.. பாஸ்போர்ட்டும் பல லட்சமும் காலி!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜின் பாஸ்போர்ட் மற்றும் 15 லட்சம் ரூபாய் பணத்தை திருடர்கள் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் முக்கியமான ரோலில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்திருப்பார். சமீபத்தில், இவர் நடித்த நயாட்டு படத்துக்கு தேசிய விருதையும் அறிவித்திருந்தனர்.

மலையாள திரையுலகில் பல சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி வரும் ஜோஜு ஜார்ஜ் நடிகை கல்யாணி உள்ளிட்ட படக்குழுவினருடன் லண்டனில் தனது அடுத்த படமான ஆண்டனி படத்தின் புரமோஷனுக்காக சென்றிருந்தார்.
லண்டனில் புரமோஷன்: மலையாள இயக்குநர் ஜோஷி இயக்கத்தில் உருவாகி வரும் ஆண்டனி படத்தில் ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்ஷன், செம்பன் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தை ஓவர்சீஸ் ரசிகர்கள் மத்தியில் ப்ரோமோட் செய்ய வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் தயாரிப்பாளர் ஐன்ஸ்டீன் உடன் லண்டன் சென்றுள்ளனர்.
லண்டன் சென்ற படக்குழுவினர் ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளனர். அப்போது தயாரிப்பாளர் ஐன்ஸ்டீன் மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஒரு காரிலும், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட மற்ற படக்குழுவினர் இன்னொரு காரிலும் பயணம் செய்துள்ளனர்.
பாஸ்போர்ட்டும் போச்சு பணமும் போச்சு: ஷாப்பிங் முடிந்து விட்டு காருக்கு திரும்பிய நிலையில், நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் தயாரிப்பாளர் ஐன்ஸ்டீன் உள்ளிட்டவர்களின் பாஸ்போர்ட் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது தெரியவந்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் ஜோஜு ஜார்ஜ் பர்ஸில் இருந்த சுமார் 15 லட்சம் மதிப்பு மிக்க பவுண்டுகளும் திருடு போயுள்ளன. உடனடியாக போலீஸாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு: லண்டனில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக நடிகர் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட ஆண்டனி படக்குழுவினரின் தொலைந்து போன பாஸ்போர்ட்டுக்கு பதிலாக தற்காலிகமாக புதிய பாஸ்போர்ட் ஒன்றை வழங்கி இருப்பதாக கூறுகின்றனர். ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த லண்டனிலேயே இப்படி காருக்குள் புகுந்து பாஸ்போர்ட் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











