நடிப்பில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ் எடுத்திருக்கும் அடுத்த அவதாரம் என்ன தெரியுமா?.. ரசிகர்கள் ஆச்சரியம்
திருவனந்தபுரம்: கேரள திரையுலகின் வெரைட்டி ஆக்டராக விளங்குபவர் ஜோஜு ஜார்ஜ். தமிழில் ஜகமே தந்திரம், பபூன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் ஆண்டனி திரைப்படம் கடைசியாக வெளியானது. தமிழை பொறுத்தவரை கமல் ஹாசன் - மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இந்த சூழலில் அவரது இயக்கத்தில் பானி என்ற திரைப்படம் உருவாகிறது. அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
கேரள திரையுலகில் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்த ஜோஜு ஜார்ஜ் இப்போது இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். ஜோஜு ஜார்ஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில் இந்த படம் மாஸ், த்ரில்லர், ஆக்சன் வடிவில் தயாராகி வருகிறது. ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியாகும் படங்களுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் தற்போது அவரது இயக்கத்தில் உருவாகும் 'பானி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து அவரது இயக்கத்தில் வெளியாக போகும் படத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 100 நாள் பானி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஜோஜு ஜார்ஜ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து, அவரே இயக்கியும் உள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடிக்க அபிநயா நாயகி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முன்னாள் பிக்பாஸ் புகழ் சாகர், ஜுனைஸ் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. திரைத்துறைக்கு வந்து 28 வருடம் நடிகனாக இருந்த ஜோஜு ஜார்ஜ் தற்போது இயக்குனராக மாறி உள்ளார்.
பிற படங்கள்: ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், துணை கதாபாத்திரம், முன்னணி நடிகர், ஹீரோ என ஜொலித்த ஜோஜு ஜார்ஜ் தற்போது இயக்குநராக மாறிய தனது கரியரில் புதிய சாதனைகளை படைக்க உள்ளார். கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா காம்போவில் உருவாக உள்ள படத்திலும் ஜோஜு ஜார்ஜ் நடிக்க உள்ளார். இந்த படத்தை தவிர அனுராக் காஷ்யப்பின் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் பான்-இந்திய நடிகராகவும் உயர்ந்துள்ளார்.
ஜோஜு ஜார்ஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ், ஏடி ஸ்டுடியோஸ் மற்றும் கோகுலம் மூவீஸ் ஆகியவற்றின் கீழ் எம் ரியாஸ் ஆடம் மற்றும் சிஜோ வட்கான் பானி படத்தை தயாரிக்கின்றனர். விஷ்ணு விஜய் மற்றும் சாம் சிஎஸ் இசையமைக்க படத்தை டிரீம் பிக் பிலிம்ஸ் விநியோகம் செய்கிறது.


Click it and Unblock the Notifications