இளையராஜா பயோபிக்.. மாரி செல்வராஜ் ஒதுக்கப்பட சாதிதான் காரணமா?.. பிரபலம் இப்படி பத்த வைச்சிட்டாரே
சென்னை: இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக இருப்பதுதான் கடந்த சில நாட்களாக திரையுலகில் பேச்சாக இருக்கிறது. தனுஷ் இளையராஜாவாக நடிக்க அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குகிறார். படத்தின் தொடக்க விழா நடைபெற்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. கமல் ஹாசன் திரைக்கதை எழுதவிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் இளையராஜா பயோபிக் வாய்ப்பை மாரி செல்வராஜ் பெறாததற்கு பத்திரிகையாளர் அந்தணன் ஒரு காரணத்தை கூறியிருக்கிறார்.
இசைஞானி இளையராஜா இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அடுத்ததாக அவரது இசையமைப்பில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு 'இளையராஜா' என்ற பெயரில் படமாகவிருக்கிறது. தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்க; கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். படத்தின் தொடக்க விழா சில நாட்களுக்கு முன்பு பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

மாரி செல்வராஜ் பெயர் லிஸ்ட்டில்: முன்னதாக இந்தப் படத்தை இயக்குநர் பால்கி இயக்குவார் என்று முதலில் தகவல்கள் வெளியாகின. அதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை ஒழுங்காக இயக்கிவிடுவாரா என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பிவருகின்றனர்.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் இளையராஜா பயோபிக்கை மாரி செல்வராஜ் இயக்காதது குறித்து பத்திரிகையாளர் அந்தணன் கூறியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அவர் பேசுகையில், "இளையராஜாவின் பயோபிக்கை இயக்குவதற்காக தனுஷ் தனக்கு பிடித்த இயக்குநர்கள் சிலரை இளையராஜாவிடம் அனுப்பி வைக்க முடிவு செய்திருக்கிறார். அதில் மிக முக்கியமானவராக மாரி செல்வராஜ் இருந்திருக்கிறார். ஆனால் மாரி செல்வராஜின் பெயரை சொல்லும்போதே இளையராஜா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
என்ன காரணம்?: அதற்கு இளையராஜா சொன்ன காரணம், 'நானும் மாரி செல்வராஜும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். அதனால் நாளை ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் படம் எடுத்திருக்கிறார்கள் என்று பெயர் வந்துவிடக்கூடாது' என்று ராஜா சொன்னதுதான். அவர் இப்படி செய்தது மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இளையராஜாவை நாம் எந்த சமுதாய வட்டத்துக்குள்ளும் வைத்து பார்ப்பதில்லை என்பதுதான் உண்மை. அவரை எல்லா சாதியினரும் அப்படி ஒரு உயரத்தில் வைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஏன் என்று தெரியவில்லை: நிலைமை இப்படி இருக்கையில் இளையராஜா தன்னை இப்படி ஏன் நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மிகப்பெரிய இசை மேதையெல்லாம் இளையராஜாவின் வீட்டிலிருந்து பாடலை படித்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இளையராஜாவுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்க வேண்டியதில்லை. மாரி செல்வராஜ் வேண்டாம் என்று அவர் சொன்ன பிறகுதான் அருண் மாதேஸ்வரனை இளையராஜாவிடம் அனுப்பி வைத்திருக்கிறார் தனுஷ்.
இளையராஜாவுக்கு பிடித்துவிட்டது: அருண் மாதேஸ்வரனை சந்தித்தபோது அவரிடம் இருந்த பணிவு உள்ளிட்டவை இளையராஜாவுக்கு பிடித்துப்போனது. அதனையடுத்து இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரனே இயக்கட்டும் என்று கூறியிருக்கிறார்" என்றார். அந்தணனின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே மாரி செல்வராஜ் கிராமிய பின்னணியில் இருந்து வந்தவர். அவருக்குத்தான் இளையராஜாவின் வீச்சு முழுமையாக புரியும். அவரையே இயக்குநராக ஃபிக்ஸ் செய்திருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் இன்னமும் கமெண்ட்ஸ்களை பார்க்க முடிவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











