ஜெயம் ரவி எங்கே?.. ஆர்த்திக்கு ரவி வீடு சொன்ன பதில் இதுவா?.. பேச வரும் குஷ்பூ?.. அந்தணன் ஓபன் டாக்
சென்னை: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்திருக்கிறார். அதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டார். மேலும் நீதிமன்றத்திலும் விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் இதுகுறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்றும்; ரவியிடம் பேச முயற்சித்தும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் ஆர்த்தி நேற்று விளக்கமளித்திருந்தார். இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இந்த விவகாரம் குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
ஜெயம் ரவி சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். அதனையடுத்து நேற்று ஆர்த்தி கொடுத்திருந்த விளக்கத்தில், " சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன்.

வாய்ப்பு மறுக்கப்பட்டது: என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல..
அனுமதிக்க முடியாது: ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது.
மதிப்பளியுங்கள்: மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்தணன் பேட்டி: ஆர்த்தியின் இந்த விளக்கம் இவ்விவகாரத்தில் புதிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இந்த விஷயம் குறித்து வெளியிட்டிருக்கும் வீடியோவில், "ஜெயம் ரவி இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை நம்பி பணம் போட்டிருக்கும் தயாரிப்பாளர்களும் அதே கேள்வியுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ரவி எடுத்த முடிவு தனக்கு தெரியாது என்று ஆர்த்தி கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசுவதற்காக ரவியின் வீட்டுக்கு சென்று அவர் எங்கே என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்களோ, எங்களுக்கு அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. கடந்த சில காலமாகவே தான் எங்கே இருக்கிறேன் என்ற பதிலை ஒழுங்காக சொல்லவில்லை. இப்போ எங்களிடம் கேட்டால் என்னம்மா சொல்வது என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.
குஷ்பூவின் என்ட்ரி: இந்த விஷயத்தில் அநேகமாக குஷ்பூ பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் குஷ்பூ வெளிநாடு டூருக்கு ஒருமுறை சென்றார். அப்போது அவருடன் செல்லும்போதுதான் ஆர்த்தியும், ரவியும் முதன்முறையாக பழக்கமானார்கள். ஏனெனில் ஆர்த்தி தரப்புக்கு குஷ்பூ ஏற்கனவே பழக்கம். சிங்கப்பூருக்கு சென்றபோதுதான் ஆர்த்தி தனது காதலை ரவியிடம் சொன்னார். பிறகு கொஞ்ச காலம் கழித்து ரவியும் ஒத்துக்கொண்டார். எனவே இந்தத் திருமணத்துக்கு முழு காரணம் குஷ்பூதான். அதனால்தான் அவர் இருதரப்பிடமும் பேசலாம் என்று சொல்கிறார்கள்" என்றார். முன்னதாக ஆர்த்தி அளித்திருந்த விளக்கத்துக்கு குஷ்பூ இன்ஸ்டாகிராமில் லைக் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











