மாநகரம் ஸ்ரீ மீண்டது எப்படி?.. லோகேஷ் கனகராஜ் செய்தது என்ன?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: வழக்கு எண் 18/9, மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த ஸ்ரீ சில மாதங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார். அதில் அவர் உருக்குலைந்திருந்தார். மேலும் சில ஆபாச சைகைகளையும் செய்தது பெரிய அதிர்ச்சியை ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருந்தது. இப்போது முழுதாக அந்த நிலையிலிருந்து மீண்டு கம்பேக் கொடுத்திருக்கும் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து தனது நடிப்பு பயணத்தை ஸ்ரீ; வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது ஸ்ரீக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகளும் வரிசையாக வரவே தொடங்கின. அந்தவகையில் மிஷ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திலும் நடித்தார். முதல் இரண்டு படங்களுமே முக்கியமான இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்து நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கினார்.
மாநகரம் ஸ்ரீ: இப்படிப்பட்ட சூழலில் தற்போது சென்சேஷனல் இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் படத்திலும் லீடு ரோலில் நடித்தார் ஸ்ரீ. அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தொடர்ந்து வில் அம்பு, இறுகப்பற்று என வரிசையாக நடித்து அனைவராலும் கவனிக்கப்பட்டார். மேலும் கண்டிப்பாக அவர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஹீரோக்களில் ஒருவராக இருப்பார் என்று ஆரூடமும் கூறப்பட்டது.
காணாமல் போன ஸ்ரீ: ஆனால் திடீரென அவருக்கு எந்தப் பட வாய்ப்பும் வரவே இல்லை. மேலும் அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியாமல்தான் இருந்தது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் சில வீடியோக்களை பதிவேற்றியிருந்தார். அதில் அவர் ஆளே உருக்குலைந்து போய் இருந்தார். அதனைப் பார்த்த பலரும் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தார்கள்.

என்ன நடந்தது?: வீடியோவை பார்த்த ரசிகர்களோ இப்படி செல்லும் அளவுக்கு ஸ்ரீக்கு என்ன ஆயிற்று என்று கேள்விகளை எழுப்ப தொடங்கினார்கள். மேலும் அவரும் சிலரை குற்றஞ்சாட்டியிருந்தார். அதனையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் ஸ்ரீக்கு உதவ வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜும் ஸ்ரீயை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தன. லோகேஷும் அதற்கான முயற்சிகளில் இறங்கி; சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாக கூறியிருந்தார்.
கம்பேக் கொடுத்த ஸ்ரீ: சூழல் இவ்வாறு இருக்க May Eye Come in என்ற நாவலை எழுதியிருப்பதாக கூறி ஒரு புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஸ்ரீயை பார்த்த பலரும் மகிழ்ச்சியடைந்தார்கள். குறிப்பாக ஸ்ரீ கம்பேக் கொடுத்துவிட்டார் என்று கூறி அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அந்தணன் பேச்சு: அந்த வீடியோவில் பேசிய அந்தணன், "ஸ்ரீக்கு கிடைத்த நண்பர்களை பார்த்து ரொம்பவே பெருமையாக இருக்கிறது. ஒரு பெண் தோழிகூட அவரை தாய் போல் பார்த்துக்கொண்டிருந்தார். லோகேஷ் கனகராஜும், எஸ்.ஆர். பிரபுவும் ஸ்ரீயை மீட்பதில் ரொம்பவே மெனக்கெட்டார்கள். அவர் வட இந்தியாவில் இருந்ததாக சொல்கிறார்கள். அங்கிருந்து அவரை மீட்டு தரை வழியாகத்தான் அழைத்து வந்தார்கள். தமிழ்நாட்டுக்கு வந்தால் அவரை சுற்றி மீடியா வெளிச்சம் அதிகம் இருக்கும் என்பதால்; பெங்களூருவில் வைத்தே அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இப்போது அவர் முழுதாக மீண்டுவிட்டார். இந்த விஷயத்தை செய்த அவரது நண்பர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
பெயரை மாற்றிக்கொண்ட நடிகர்கள் எல்லாம் பெரிய இடத்துக்கு வந்திருக்கிறார்கள். எனவே ஸ்ரீயும் தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டால் தனது கடந்த காலத்திலிருந்து வெளியே வர முடியும் என்பது என்னுடைய கருத்து" என்றார்.


Click it and Unblock the Notifications











