Vijayakanth - விஜயகாந்த் மகனுக்கு அவரது குடும்பம் ஏன் அதை செய்யவில்லை?.. விளாசிய பத்திரிகையாளர் அந்தணன்
சென்னை: விஜயகாந்த்தின் மகனுக்கு அவரது குடும்பம் ஒரு விஷயத்தை செய்திருக்க வேண்டும் என பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார். அவரது பேட்டியை பார்த்த ரசிகர்கள் ஒருவகையில் பார்த்தால் அந்தணன் சொல்வதும் சரிதானே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். மேலும் விஜய்யையும் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட அவருக்கு டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. தங்களது வீட்டில் ஒருவர் இறந்துபோனால் என்ன சோகம் இருக்குமோ அதே சோகம்தான் பெரும்பாலானோரிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லடக்கம்: விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதனையடுத்து விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்த சூழலில் நடிகரும், விஜயகாந்த்துக்கு நெருக்கமாக இருந்தவருமான மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கொந்தளித்து பேசியிருக்கிறார்.
வராத வடிவேலு: விஜயகாந்த்தால் பயன் அடைந்தவர்களில் விஜய், சூர்யா, வடிவேலுவும் அடக்கம். இவர்களில் விஜயகாந்த் உடலுக்கு நேரில் வந்து விஜய் அஞ்சலி செலுத்தினார். சூர்யா விஜயகாந்த் இறந்த அன்று இரங்கல் தெரிவித்துவிட்டு; பிறகு விஜயகாந்த்தின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால் வடிவேலுவோ நேரிலும் வரவில்லை; இரங்கலும் தெரிவிக்கவில்லை. இது அவருக்கு கடும் கண்டனங்களை பெற்றுக்கொடுத்திருக்கிறது.
ராகவா லாரன்ஸ்: இதற்கிடையே விஜயகாந்த்தின் நினைவிடத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ராகவா லாரன்ஸ், 'விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியனுடன் இணைந்து நடிக்க தயார். யாராவது இயக்குநர் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் கொண்டு வாருங்கள்' என கூறியிருந்தார். அவரது அறிவிப்பு பலரிடமும் வரவேற்பை பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஏன் செய்யவில்லை: அதேசமயம் ராகவா லாரன்ஸ் செய்வதைவிடவும் விஜய் செய்வதற்குதான் அதிக அளவு பொறுப்பு இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். ஏனெனில் விஜய் கரியரின் ஆரம்பத்தில் தடுமாறிக்கொண்டிருந்தபோது எந்தவித தயக்கமும் இல்லாமல் செந்தூரப்பாண்டி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார் விஜயகாந்த். எனவே விஜயகாந்த்தின் மகனுக்கு விஜய் தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் ஆணித்தரமாக சொல்கிறார்கள் பலர்.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் இந்த விவகாரம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விஜயகாந்த்தின் மகனுடன் நடிக்கிறேன் என்று லாரன்ஸ் சொன்னதைவிடவும் விஜய் சொல்ல வேண்டும். ஏனெனில் அவருக்குத்தான் அந்த கடமை அதிகம் இருக்கிறது. விஜயகாந்த்தால் விஜய்யும் பயன்பெற்றிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.
குடும்பம் ஏன் செய்யவில்லை: அதேசமயம் சண்முகபாண்டியன் விவகாரத்தில் குடும்பம் முன்னரே ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும். அதாவரது லாரன்ஸ் சொல்கிறார், விஜய் சொல்ல வேண்டும் என்று மற்றவர்கள் பேசும் நிலைமையே விஜயகாந்த் மகனுக்கு வந்திருக்கக்கூடாது. ஏனெனில் விஜயகாந்த்தால் வளர்ந்தவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அதேபோல் விஜயகாந்த் குடும்பத்திடம் இல்லாத பணம் இல்லை. அவர்கள் ஆரம்பத்திலேயே ஒரு 50 கோடி ரூபாயை மகனுக்காக ஒதுக்கி; பெரிய இயக்குநர் ஒருவரை அழைத்து எனது மகனை வைத்து படம் இயக்குங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.
அப்படி செய்திருந்தால் இப்போது மற்றவர்களை எதிர்பார்க்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது. ஏன் அவர்கள் அப்படி செய்யவில்லை என்று தெரியவில்லை" என்றார். சண்முகபாண்டியன் அடுத்ததாக சசிகுமார் இயக்கத்தில் குற்றப்பரம்பரை வெப் சீரிஸில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











