ஜன நாயகன் படத்தோடு ஹெச்.வினோத்தை முடிச்சு விட்றாதீங்க.. விஜய்க்கு சேவை செய்ய வரல.. பிரபலம் ஓபன் டாக்
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் விஜய். இதுதான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. அரசியலில் விஜய் குதித்திருக்கும் சூழலில் படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தச் சூழலில் அதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கிறார்.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான GOAT திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தில் கமிட்டானபோதே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய். கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடத்தப்பட்டது. அப்போது பேசிய அவர் தனது கட்சியின் அரசியல் எதிரி திமுகதான் என்பதை பிரகடனப்படுத்தினார். ஆளுங்கட்சியை எதிர்க்கிறாரே என்று அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கொஞ்சம் அச்சப்படத்தான் செய்தார்கள்.

விளாசிய விஜய்: ஆனால் விஜய்யோ திமுகவை விமர்சிப்பதை விடவே இல்லை. எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்துகொள்ளாததால்; அந்த விஷயத்திலும் திமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து பாஜகவின் பி டீம்தான் விஜய் என்று திமுகவினர் விமர்சனம் செய்தார்கள். அதுமட்டுமின்றி அவரது அரசியல் மூவ்மென்ட்டுகளையும் தொடர்ந்து கிண்டல் செய்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பரந்தூர் பறந்த விஜய்: முக்கியமாக தனது அலுவலகத்துக்குள் இருந்துகொண்டே அரசியல் செய்கிறார் என்றும் விஜய்யை நோக்கி விமர்சன அம்புகள் வீசப்பட்டன. சூழல் இப்படி இருக்க அவர் சமீபத்தில் பரந்தூருக்கு சென்றார். அடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலுக்கு செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். அதன் காரணமாக இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.
ஜன நாயகன்: விஜய் அரசியலில் குதித்திருப்பதால் அவரது கடைசி படம் என்று சொல்லப்படும் படத்துக்கு என்ன பெயராக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள். அதன்படி குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று படத்தின் பெயருடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. நெய்வேலியில் அவர் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்ததை அடிப்படையாக வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் இரண்டாவது லுக் போஸ்டரில், 'நான் ஆணையிட்டால்' என்ற கேப்ஷனோடு விஜய் கையில் சாட்டையை வைத்தபடி இருந்தார்.
அந்தணன் பேட்டி: படத்தின் பெயரும், இரண்டு போஸ்டர்களும் இந்தப் படம் கண்டிப்பாக அரசியல் ரீதியாக இருக்கும் என்பதை உணர்த்துவதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஜன நாயகன் திரைப்படம் சக்சஸ் ஆகிறதா இல்லை ஆகவில்லையா என்பதைவிடவும்; அரசியல் ரீதியாக எப்படி மக்களிடம் ரீச் ஆகிறது என்பதுதான் முக்கியம். வினோத்துக்கென்று பெரிய ட்ராவல் ஒன்று இருக்கிறது.
முடிச்சு விட்றாதீங்க: அவரை ஜன நாயகன் படத்தோடு முடிச்சுவிடக்கூடாது. அவரை ஒன்றும் விஜய்யின் அரசியலுக்கு சேவை செய்ய வந்தவர் போல் நடத்திவிடக்கூடாது. ஜெய் சங்கர் ஒருமுறை கருணாநிதி எழுதிய கதையில் நடித்தார். அந்தப் படத்தில் அவரது பெயரே உதய சூரியன். திமுகவுக்கு ஆதரவாகவே பேசி நடித்தார். அப்போதிருந்து அவரை ஒரு கட்சி நடிகர் என்றே முத்திரை குத்தினார்கள். அதுபோல் வினோத்தையும் ஆக்கிவிடக்கூடாது"என்றார்.


Click it and Unblock the Notifications











