STR 48 - என்னது எஸ்டிஆர் 48 படம் டிராப் ஆகிறதா?.. என்னதான் நடக்குது.. பத்திரிகையாளர் சொன்ன தகவல்
சென்னை: தமிழ் சினிமாவில் பல ஜானர்களில் புகுந்து விளையாடும் ஹீரொக்களில் ஒருவர் சிம்பு. ரசிகர்களால் எஸ்டிஆர் என்று அழைக்கப்படுகிறார். அவர் தற்போது தனது 48ஆவது படத்தில் நடித்துவருகிறார். படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க; கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த சூழலில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிப்பு, இயக்கம், நடனம், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என எந்த ஃப்ளாட்பார்மிலும் தனது தடத்தை ஆழமாக பதித்தவர். இடையில் சில காரணங்களால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் தத்தளித்த சிம்பு ஒருகட்டத்தில் சுதாரித்துக்கொண்டு மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்தவகையில் அவரது இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாகவே தொடங்கியது. ஈஸ்வரன் தோல்வியடைந்தாலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மாநாடு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

வரிசையான ஹிட்: மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு கௌதம் மேனனுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தில் பணியாற்றினார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக சிம்புவின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் எஸ்டிஆர் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதாக அவரது ரசிகர்கள் குதூகலித்தனர். அப்படிப்பட்ட சூழலில் பத்து தல படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் சிம்புவின் நடிப்பு மேற்கொண்டு மெருகேறியிருந்தது.
எஸ்டிஆர் 48: இந்த சூழலில் அவர் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் படத்தை தயாரிக்க; கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி படத்தை இயக்குகிறார். முதல் படத்திலேயே தேசிங்கு பெரியசாமி கவனம் ஈர்த்தவர் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
ரஜினிக்கான கதை: அதுமட்டுமின்றி இந்தக் கதையை முதலில் தேசிங்கு ரஜினியிடம்தான் கூறினார். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் விலகிவிட சிம்பு உள்ளே வந்தார். ஏற்கனவே பத்து தல படத்தையும் ரஜினியை வைத்து உருவாக்குவதற்கே முயற்சி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரஜினிக்கான கதை சிம்புவுக்கு வந்தாலும் இதில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தேசிங்கு பெரியசாமி தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
தீவிர பயிற்சியில் சிம்பு: இந்தப் படத்துக்காக சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட பல கலைகளை தீவிரமாக பயின்றதாக கூறப்பட்டது. இதற்காக அவர் தாய்லாந்தும் சென்று வந்தார். இருந்தாலும் படத்தின் அறிவிப்பு வெளியானதோடு சரி அடுத்தக்கட்ட நகர்வுக்கு படம் செல்லவில்லை. இதனால் படம் டிராப்பாகிவிட்டதாக என்ற தகவல் ஒன்று கடந்த சில வாரங்களாகவே ஓடிக்கொண்டிருந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் அச்சமடைந்தனர்.
அதெல்லாம் இல்லை: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி எஸ்டிஆர் 48 குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "சிம்பு நடிக்கும் 48ஆவது படம் ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்படுகிறது. இதில் கிராஃபிக்ஸ் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இப்போது அதற்கான பணிகள் ராஜ்கமல் நிறுவனத்தில் மும்முரமாக நடந்துவருகிறது. இப்படத்தில் சிம்பு இரண்டு விதமான கெட் அப்புகளில் தோன்றுகிறார். எனவே படம் டிராப்பாக வாய்ப்பே இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
இது சிம்பு ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. மேலும் இப்படத்துக்காக அதிகளவிலான பட்ஜெட்டை ராஜ்கமல் நிறுவனம் ஒதுக்கியிருப்பதாக ஒரு பேச்சு திரைத்துறையில் ஓடிக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











