பாலியல் தொல்லை.. கூட்டத்தில் கோவிந்தா.. ராதிகா ஏன் இப்போ வாய திறந்தாங்க?.. சேகுவேரா எழுப்பிய கேள்வி
சென்னை: ஹேமா கமிட்டி அறிக்கைதான் இப்போதைக்கு திரையுலகில் தலைப்பு செய்தியாக இருக்கிறது. மலையாள திரையுலகை சேர்ந்த பல நடிகைகள் தங்களுக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பதாக அந்தக் கமிட்டியிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றனர். இதன் காரணமாக மலையாள சினிமா கலைஞர்கள் சங்கமான AMMA அமைப்பு கலைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே நடிகை ராதிகாவும் சில நாட்களுக்கு முன் சில விஷயங்களை சொல்லி பரபரப்பை பற்ற வைத்தார்.
இந்திய திரையுலகில் இப்போதைக்கு அனைவராலும் உற்று கவனிக்கப்படும் திரைத்துறையாக மாறியிருக்கிறது மலையாள திரைத்துறை. சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட பிறகு அந்த மாநில அரசாங்கத்தால் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு பெண் கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை நடக்கிறதா என்பது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டது. அந்தக் கமிட்டி தனது அறிக்கையை 2019ஆம் ஆண்டு கேரள அரசிடம் சமர்ப்பித்தது.

வெளியான அறிக்கை: ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகியும் அறிக்கையின் அம்சங்கள் வெளியிடப்படவில்லை. இதனையடுத்து கேரளாவை சேர்ந்த ஐந்து பேர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அந்த அறிக்கையை பெற்றிருக்கின்றனர். அதில் பல நடிகைகள் தங்களுக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பதாக கூறியிருக்கின்றனர். மேலும் ஒரு இளைஞரும் தனக்கு நடந்ததாக தெரிவித்திருக்கிறார். முக்கியமாக இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக், முகேஷ் உள்ளிட்டோர் மீது அடுக்கடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றனர்.
AMMA கலைப்பு: இதில் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன் லால் ஆகியோரின் கருத்துக்கள் முக்கியமாக கருதப்பட்டது. ஆனால் அறிக்கை வெளியாகி சில நாட்கள் மோகன் லால் மௌனமாகவே இருந்தார். மேலும் AMMA அமைப்பின் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார். அவரது மௌனம் பல விவாதங்களை எழுப்பியதை அடுத்து சமீபத்தில் மௌனம் கலைத்தார். அதேபோல் மம்மூட்டியும் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
ராதிகாவின் பேச்சு: சூழல் இப்படி இருக்க தமிழ் திரையுலகிலும் இதுபோன்ற கமிட்டி அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. விரைவில் அது அமைக்கப்படும் என நடிகர் சங்க செயலாளர் விஷாலும் உறுதியளித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க ராதிகா சமீபத்தில் பேசுகையில் நடிகைகளின் கேரவனுக்குள் ரகசிய கேமரா வைத்து ரசிப்பார்கள் என்று கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார். திரையுலகில் மூத்த நடிகையாக இருக்கும் ராதிகாவின் இந்தக் கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் ராதிகா பேசியது குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பத்திரிகையாளர் சேகுவேரா, "ராதிகா ஏன் இந்த விஷயத்தை இப்போது சொன்னார்கள். எப்போவோ சொல்லியிருக்க வேண்டும். அசிங்கமான விஷயம் நடந்திருக்கிறது என்றால் அது நடந்தபோதே சொல்லியிருந்தால் மற்ற நடிகைகளும் அலெர்ட் ஆகியிருப்பார்கள். இப்போதான் பேச ஆரம்பித்திருக்கிறீர்கள். கும்பலில் கோவிந்தா போடும் வேலையை வைத்துக்கொள்ளாதீர்கள். துணிச்சலாக ராதிகா அப்போதே பேசியிருக்க வேண்டும். ராதிகாவை பாராட்டக்கூடாது . மலையாள நடிகையைத்தான் பாராட்ட வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











