சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்கு சோபிதா காரணமா?.. 1000 கோடிக்காகத்தான் இரண்டாவது திருமணமா?
சென்னை: நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார் நாக சைதன்யா. இவர் ஏற்கனவே சமந்தாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இவரது இரண்டாவது திருமணம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் பிரமாண்டமாக நடந்தது. இதில் திரையுலகினர் சிலரும், இரு வீட்டாரும் கலந்துகொண்டார்கள். சூழல் இப்படி இருக்க இந்தத் திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா பேசியிருக்கிறார்.
சமந்தாவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவுக்கு காதல் உருவானது. அந்தக் காதலுக்கு வீட்டு தரப்பிலிருந்து பச்சைக் கொடி காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள் இரண்டு பேரும். கிறிஸ்தவ முறைப்படியும், ஹிந்து முறைப்படியும் என மொத்த இரண்டு முறை அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா நடிப்பில் கவனம் செலுத்திவந்தார்.

ஏற்பட்ட பிரிவு: சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இரண்டு பேரும் கடந்த 2021ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தார்கள். அந்தப் பிரிவுக்கு சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோய்தான் காரணம் என்று பலரும் சொன்னார்கள். பிரிவுக்கு பிறகு சமந்தா சிங்கிளாக இருந்தார். நாக சைதன்யாவோ பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்த சோபிதா துலிபாலாவை ரகசியமாக காதலித்தார். பிறகு இந்தக் காதலுக்கும் சைதன்யா வீடு க்ரீன் சிக்னல் கொடுத்து நிச்சயதார்த்தத்தையும் நடத்தி வைத்தது.
பிரமாண்ட திருமணம்: அதனையடுத்து இரண்டு பேருக்கும் கடந்த நான்காம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் திருமணம் நடந்தது. அங்கிருக்கும் நாக சைதன்யாவின் தாத்தாவான நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு சோபிதா கழுத்தில் தாலி கட்டினார் அவர். இரவு 8 மணிக்கு சரியாக அவர் சோபிதாவை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார். இத்திருமணத்தில் இரு வீட்டார், நண்பர்கள் தவிர்த்து திரையுலகிலிருந்து சிலரும் கலந்துகொண்டு தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள்.
சமந்தா ரசிகர்கள் ஆதங்கம்: இந்தத் திருமணத்துக்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். இருந்தாலும் சமந்தாவின் ரசிகர்களோ எங்க சாமை இப்படி வேண்டுமென்றே ஒதுக்கிவிட்டு இரண்டாவது திருமணம் செய்யும் நாக சைதன்யா; இந்தத் திருமண வாழ்க்கையையாவது ஒழுங்காக நடத்த வேண்டும் என்று ஆதங்கத்தோடு பேசிவருகிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா இத்திருமணம் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
சேகுவேரா பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், “சமந்தாவின் அப்பா இறந்தபோது நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் நடந்திருக்கிறது. இதற்கெல்லாம் எப்படி அவர்களுக்கு மனது வந்தது என்று தெரியவில்லை. சமந்தாவை சைதன்யா ரொம்பவே மிஸ் செய்துவிட்டார். அதற்காக அவர்தான் வருத்தப்பட வேண்டும். ஏனெனில் நோய் காரணமாகத்தான் சமந்தாவை பிரிந்ததாக சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி ஏற்கனவே நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அதனால்தான் சமந்தாவை நாக சைதன்யா ஒதுக்கிவிட்டார் என்றும் ஒரு தகவல் இருக்கிறது.
1000 கோடி ரூபாய்க்காகத்தான்: சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தருவதாக சொன்னார்கள். ஆனால் அவரோ வேண்டாம் என்று சொல்லிவிட்டார். சுயமாக முன்னேறியவர் சமந்தா. அவரை போய் இவர் ஒதுக்கிவிட்டாரே. நாகார்ஜுனா குடும்பத்துக்கு 3000 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறது. சோபிதா துலிபாலாவும் சும்மா இல்லை. அவருக்கு ஆயிரம் கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறது. 1000 கோடி ரூபாயுடன் ஒரு பெண் வரும்போது யார் வேண்டாம் என்று சொல்வார்கள். அந்த 1000 கோடி ரூபாய் சொத்துக்காகக்கூட சைதன்யா இந்தத் திருமணத்தை செய்திருக்கலாம்” என்றார்.


Click it and Unblock the Notifications











