சூர்யாவும் ஜோதிகாவும் டார்கெட் செய்யப்படுகிறார்களா?.. பின்னணியில் யார்?.. சீக்ரெட் உடைத்த பிரபலம்
சென்னை: சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படம் கடந்த ஒன்றாம் தேதி வெளியானது. பெரிய எதிர்பார்ப்புடன் படம் வெளியானாலும் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் வணிக ரீதியாக இந்தப் படம் வெற்றி பெற்று சூர்யாவின் 2டி நிறுவனத்துக்கு லாபத்தைதான் கொடுத்திருக்கிறது என்று திரைத்துறையில் பலமாகவே பேச்சு எழுந்திருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க கங்குவா திரைப்படம் போலவே ரெட்ரோ திரைப்படத்தின் மீதும் வேண்டுமென்றே சிலர் வன்மத்தை கக்குகிறார்கள். படம் தோல்வியடைய என்னவெல்லாம் செய்ய முடியுமா? அதனை எல்லாம் ஒருதரப்பினர் செய்கிறார்கள் என்று சூர்யாவின் ரசிகர்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகுமாரின் மகனான சூர்யாவுக்கு ஆரம்பத்தில் நடிப்பதற்கே பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் நேருக்கு நேர் படத்திலிருந்து அஜித் விலகியதைத் தொடர்ந்து இயக்குநர் வசந்த் சிவகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி; சூர்யாவை சம்மதிக்க வைத்து ஹீரோவாக்கினார். முதல் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும் சூர்யாவின் நடிப்பு, நடனம் ஆகியவைகளை வைத்து பலரும் ட்ரோல் செய்தார்கள். அதனைத் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டே வந்த அவர் இப்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். கடைசியாக திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் என்றால் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் சட்டென்று நியாபகத்துக்கு வராது.
கங்குவா கொடுத்த அடி: அந்த அளவுக்கு அவரது கிராஃப் இருக்கிறது. சிவா இயக்கத்தில் அவர் நடித்த கங்குவா திரைப்படம் மிகப்பெரிய பில்டப்புகளோடு வெளியானது. ஆனால் படத்தில் ஒன்றுமே இல்லை. முக்கியமாக ப்ரோமோஷனில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு காரணம் என்றே பலரும் சொல்கிறார்கள். கங்குவா ரிலீஸுக்கு பிறகு அவர் எங்கே இருக்கிறார் என்றும் தெரியவில்லை. அதுமட்டுமின்றி அப்படதால் அதிக கடன் அவருக்கு வந்துவிட்டதாகவும்; அதன் காரணமாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு ஒரு படத்தை சம்பளம் வாங்காமல் சூர்யா நடித்துக்கொடுக்கவுள்ளார் என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது. ஆகமொத்தம் கங்குவா படம் ஞானவேல் ராஜாவுக்கு மோசமான நினைவுகளையே கொடுத்திருக்கின்றன.

ரெட்ரோ சுமார் ஹிட்: கங்குவா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு ஒரு ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் சூர்யா. அதன் காரணமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ படத்தை அவர் ரொம்பவே நம்பியிருந்தார். கடந்த மே ஒன்றாம் தேதி அந்தப் படம் ரிலீஸானது. வழக்கமான கார்த்திக் ஸ்டைல் சினிமாதான் என்றாலும் திரைக்கதையில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் சூர்யா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார் என்றும்; தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை இந்தப் படத்திலும் அவர் நிரூபித்துவிட்டார் என்பதும்தான் படம் பார்த்த அனைவரது ஒருமித்த கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிவாசலாவது காப்பாற்றுமா?: என்னதான் இருந்தாலும் ரெட்ரோ திரைப்படமும் அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத்தான் கொடுத்திருக்கிறது. எனவே இப்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்னவென்றால் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் திரைப்படம்தான். இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருகிறது. அதனை முடித்து வாடிவாசலுக்கு செல்லவிருக்கிறார் சூர்யா. இதற்கிடையே சூர்யா மீது வேண்டுமென்றே பலரும் வன்மத்தை கக்குகிறார்கள் என்ற கருத்தும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு விரிவாக பேசியிருக்கிறார்.
சேகுவேரா கொடுத்த பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "கங்குவா படத்துக்கு அதிக அளவிலான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன என்பது உண்மைதான். ஆனால் ரெட்ரோ படத்தில் சூர்யாவின் உழைப்பு அபாரமாக இருந்தது. தன்னுடைய பங்கை மிக சிறப்பாக செய்திருக்கிறார் அவர். இது கருத்தியல் ரீதியில் தோல்வியடைந்ததா இல்லை கமர்ஷியல் ரீதியாக தோல்வியடைந்ததா என்பது விவாதிக்கக்கூடிய விஷயம். ஆனால் இதனை மொக்கை படம் என்று விமர்சிப்பவர்களுக்கு மனசாட்சி என்பது வேண்டும். காதல் கதையோடு ஆக்ஷன் கதையாகவும் தருவதற்கு அவர் முயன்றிருக்கிறார். கதை சொல்லும்போது ஒரு மாதிரி இருக்கும். சில சமயங்களில் அதை படமாக எடுக்கும்போது வேறு மாதிரி போய்விடும். இது சினிமாவில் சகஜம்தான்.
இடைவேளைக்கு பிறகுதான்: இடைவேளைவரை ரெட்ரோ நன்றாகத்தான் இருந்தது. அதற்கு பிறகுதான் கதையை எந்தப் பக்கம் கொண்டு செல்வது என்று தெரியாமல் இயக்குநர் குழம்பிவிட்டார்போல. வேண்டுமென்றே சில காட்சிகள் திணிக்கப்பட்டது போன்றும் இருக்கின்றன. முதலில் பிரகாஷ் ராஜ், நாசர், ஜெயராம் போன்றோர் எல்லாம் இந்தப் படத்தில் எதற்காக நடித்திருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேருமே சிறந்த நடிகர்கள். ஜெயராம் என்னவெல்லாமோ செய்கிறார். ஆனால் சிரிப்புதான் வரவில்லை. இப்படத்துக்கு நடிகர்கள் தேர்வு செய்யப்பட்ட விஷயத்திலும் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. இதெல்லாம்தான் இந்தப் படத்தின் தோல்விக்கு காரணமாக சொல்ல முடியும். சூர்யா மீது எந்தவிதமான தவறும் இல்லை. வேண்டுமென்றே ரெட்ரோ படம் தோல்வி படம் என்று சொல்லக்கூடாது.

பழைய பேச்சுக்களை முடிச்சு போடாதீர்கள்: அதேபோல் ஜெய்பீம் விவகாரத்தில் என்ன நடந்தது? ஜோதிகா, சூர்யா என்ன பேசினார்கள்? என பழைய கதைகளை கொண்டுவந்து இப்போதைய சூர்யா படங்களுடன் முடிச்சு போடக்கூடாது. ஜெய்பீம் விவகாரம் அப்போதே முடிந்துவிட்டது. பள்ளிக்கூடம் கட்டுங்கள் என்று ஜோதிகா சொன்னது நல்ல கருத்துதான். அதை அவர் சொன்ன இடம்தான் தவறு.அதற்காக ஒருவரை எப்போதுமே டார்கெட் செய்வது என்பதை ஏற்க முடியாது. அதேபோல் ரெட்ரோ படத்தின் விழாவில் சிவகுமார் சிக்ஸ் பேக் பற்றிய பேசிய விவகாரமும் அப்போதே முடிந்துவிட்டது. ஆனால் அதையும் ரெட்ரோ படத்துடன் ஒப்பிடவே கூடாது. இத்தனைக்கும் கங்குவா மாதிரி ரெட்ரோ படத்துக்கு ஓவர் பில்ட் அப்பெல்லாம் கொடுக்கப்படவில்லை.
பின்னணியில் யார் இருக்கிறார்கள்?: வேண்டுமென்றே சூர்யா மீது எதிர்மறை விமர்சனங்களை வைக்கிறார்கள். ரெட்ரோவை குப்பை படம், மொக்கை படம் என்று சொல்வதெல்லாம் ஓவர். சூர்யாவை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில திரை பிரபலங்களும், அரசியல் சக்தியினரும் இதன் பின்னணியில் இருக்கிறார்கள். அதனால்தான் திட்டமிட்டே ரெட்ரோ படத்தை சோஷியல் மீடியாவில் கிண்டல் செய்துவருகிறார்கள். இது ரொம்பவே தவறான விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன். இதையெல்லாம் செய்யவே கூடாது" என்றார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











