சீனு ராமசாமியின் கோழிப்பண்னை செல்லதுரை.. எப்படி இருக்கு படம்?.. பிரபலம் சொன்ன விமர்சனம்
சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். மனிதர்களுக்கிடையேயான உறவுகளை மையமாக வைத்தும்; மனிதத்தை மையமாக வைத்தும்தான் இவரது படங்கள் வெளியாகும். இன்று அவரது இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ஏகன் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். மேலும் யோகிபாபு, பிரிகிடா உள்ளிட்டோ நடித்திருக்கின்றனர். படம் பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து கூடல்நகர் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனுராமசாமி. முதல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சீனுராமசாமி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குநராக வருவார் என கணிக்கப்பட்டார். இந்தப் படத்துக்கு பிறகு தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கினார் சீனுராமசாமி. இந்தப் படம்தான் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக முதல் படம் ஆகும். படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்தப் படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதனால் மேலும் கவனிக்கப்படும் இயக்குநர் ஆனார் சீனு ராமசாமி.

கவனம் ஈர்த்த சீனு: தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு பிறகு சீனுராமசாமி நீர்ப்பறவை படத்தை இயக்கினார். படத்தின் காட்சிகளும், வசனங்களும் பெரிதும் ரசிகர்களை ஈர்த்தன. ஆனால் வசூல் ரீதியாக படம் சரியாக போகவில்லை. இருப்பினும் நீர்ப்பறவைக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கவே செய்கின்றனர். சீனு ராமசாமியின் கேரியரில் மிக முக்கியமான படமாக கருதப்படுவது தர்மதுரை.
தர்மதுரை: தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதி, ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதற்கு முன்னதாக சீனுராமசாமி இயக்கிய படங்கள் கொண்டாடப்படாலும் தர்மதுரை படத்தை அனைவரும் கொண்டாடினார்கள். வீட்டில் இருக்கும் அனைவரும் ஒதுக்கும் மகன் மீது தாய் வைத்திருக்கும் பாசம், காதலியை இழந்த பிறகு ஒருவன் தத்தளிப்பது என சீனுராமசாமி இயக்கத்தில் பின்னியிருப்பார். இந்தப் படத்தில் பாடல் எழுதியதற்காக வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அவர் இயக்கிய இடம் பொருள் ஏவல் படம் இன்றுவரை ரிலீஸாகாமல் இருக்கிறது.
கோழிப்பண்ணை செல்லதுரை: சீனு ராமசாமி இயக்கியிருந்த மாமனிதன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில்; இன்று அவரது இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை ரிலீஸாகியிருக்கிறது. ஏகன், பிரிகிடா, யோகிபாப் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு படம் பற்றிய தனது விமர்சனத்தை கூறியிருக்கிறார்.
பாலுவின் விமர்சனம்: அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், “சீனு ராமசாமியின் படங்கள் என்றாலே மனித உறவுகளை, சிக்கல்களை பேசும் படமாகத்தான் இருக்கும். அவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட படங்கள் எல்லாம் அப்படித்தான். அதேபோல்தான் கோழிப்பண்ணை செல்லதுரை படமும் வந்திருக்கிறது. அவரது படங்கள் பெரும்பாலும் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கும் கதைக்களங்களை கொண்டிருக்கும். அதேதான் இதிலும்.
கேமரா, இசை: அந்த சுற்றுவட்டார பகுதிகளை கேமராமேன் அசோக் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இசையைப் பொறுத்தவரை ரகுநந்தனும் அபாரமாக இசையமைத்திருக்கிறார். ஏகன் என்ற புதுமுகம் ஹீரோவாக நடித்திருக்கிறார். மிக அற்புதமாக அவரிடமிருந்து சீனு நடிப்பை வாங்கியிருக்கிறார். பொதுவாக ஒரு புதுமுகத்தை வைத்து படம் இயக்குவதற்கு இயக்குநர்கள் தயங்குவார்கள். ஆனால் சீனு ராமசாமி தைரியமாக அதை செய்திருக்கிறார். பிரிகிடாவிடமும், ரியாஸ் என்பவரிடமும் அருமையாக நடிப்பை வாங்கியிருக்கிறார். அதுதான் ஒரு இயக்குநரின் வேலை.
படத்தில் மைனஸே இல்லையா என்றால் இருக்கிறது. பல காட்சிகள் ரிப்பீட் ஆகின்றன. சில இடங்களில் தொய்வுகள் ஏற்படத்தான் செய்கின்றன. ஆனாலும் சிம்ப்பிள் லைனை வைத்துக்கொண்டு ரசிகர்களை எமோஷனலாக கனெக்ட் ஆக்குவது சாதாரண விஷயமில்லை. அதனை சீனு ராமசாமி நன்றாகவே செய்திருக்கிறார்” என்றார்.


Click it and Unblock the Notifications











