Ajithkumar -எனக்கு பேர் வருதோ இல்லையோ அவருக்கு கண்டிப்பா வரும் சார்.. நம்பிக்கையுடன் கூறிய அஜித் பட இயக்குநர்
சென்னை: காதல் மன்னன் படம் உருவானபோது அந்தப் படத்தின் இயக்குநர் சரண் அஜித் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்த சம்பவம் தற்போது தெரியவந்திருக்கிறது.
கோலிவுட்டின் டாப் 5 நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு படம் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை அடுத்து அவர் தனது 62ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தக் கதையும் ஆக்ஷன் கதையாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தாலும் அஜித்குமார் தனது ஆரம்பகாலத்தில் காதல் கதைகளில் நடித்து பிரபலமானவர்.

காதல் மன்னன் அஜித்குமார்: அஜித் நடித்த காதல் படங்களில் காதல் மன்னன் படத்துக்கு தனி இடம் உண்டு. இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சரணின் முதல் படம் காதல் மன்னன். இப்படத்தில் விவேக், கரண், மானு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நிச்சயதார்த்தம் ஆன பெண்ணை காதலிக்கும் ஹீரோ என்ற லைனோடு உருவானது படம். இந்தப் படத்தில் ஆரம்பித்த அஜித் - சரண் கூட்டணி அமர்க்களம், அட்டகாசம், அசல் என நீண்டது.
காதல் மன்னனில் எம்.எஸ்.விஸ்வநாதன்: காதல் மன்னன் படத்தில் ஏகப்பட்ட சிறப்புகள் இருந்தாலும் அதில் முதல் சிறப்பு மெல்லிசை மன்னர் என அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன் நடித்தது. அதுவரை இசையின் மூலம் தமிழர்களை கட்டிப்போட்டிருந்த எம்.எஸ்.வி இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். படம் குறித்த அறிவிப்பு வெளியானபோது, எம்.எஸ்.விஸ்வநாதன் படத்தில் நடிப்பதை பலரும் ஆச்சரியமாகவே பார்த்தார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக கஷ்டப்பட்ட இயக்குநர்: காதல் மன்னன் படத்தில் நடிக்க விஸ்வநாதனோ முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. ஆறு மாதங்கள் சரணும், விவேக்கும் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் எம்.எஸ்.விஸ்வநாதன் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார். மெஸ் விஸ்வநாதன் என்ற கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட்.
மேன்ஷன் பேக் ட்ராப்: காதல் மன்னன் படத்தில் மேன்ஷன் பேக் ட்ராப்பை வைத்திருந்தது அன்றைய காலகட்டத்தில் புதிதாகவே கருதப்பட்டது. பேச்சிலர்களுக்கென்று தனியாக மேன்ஷன் என்ற முறை இருப்பது காதல் மன்னன் படம் வெளியான பிறகுதான் பிரபலமடைந்தது. அதேபோல் அப்டத்தின் பாடல்களும் அட்டகாசமாக அமைய படம் மெகா ஹிட்டானது.
மிரண்டு போன பத்திரிகையாளர்: காதல் மன்னன் படம் உருவாகி வெளியீட்டுக்கு தயாரானபோது பெரிதாக அந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு இல்லையாம். சொல்லப்போனால் யாருமே அந்தப் படத்தை கண்டுகொள்ளவில்லையாம்.
நிலைமை இப்படி இருக்க படத்தின் ஸ்டில்ஸை வாங்குவதற்காக பத்திரிகையாளர் செய்யாறு பாலு படத்தை தயாரித்த வெங்கடேஸ்வராலயம் அலுவலகத்துக்கு சென்றாராம். படத்தின் ஃபோட்டோ பிரிண்ட்டை பார்த்த பாலு, அஜித்தை கண்டு மிரண்டுவிட்டாராம். என்ன இவ்ளோ அழகா இருக்கார் என கூறினாராம். அதற்கு தயாரிப்பு தரப்பு, படத்தை பாருங்கள் சார் இன்னும் சூப்பரா இருக்கும் என கூறியதாம்.
நம்பிக்கை வைத்த இயக்குநர்: இதனையடுத்து படத்தின் இயக்குநர் சரணை சந்தித்தாராம் செய்யாறு பாலு. அப்போது, அவரிடம் சரண், "சார் இது என்னுடைய முதல் படம். இது எனக்கு பெயர் வாங்கி கொடுக்கிறதோ இல்லையோ. நிச்சயம் அஜித்துக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுக்கும்.
குறிப்பாக இந்தப் படத்துக்கு பிறகு அவருக்கென்று பல பெண்கள் ரசிகைகளாக மாறுவர்" என நம்பிக்கையுடன் சொன்னாராம். அவர் சொன்னதுபோலவே காதல் மன்னன் படத்திலிருந்து அஜித்துக்கு பல பெண்கள் ரசிகைகளாக மாறியது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











