Thug Life - கமல்ஹாசனின் தக் லைஃப் கதை இதுதானா?.. சிம்பு அவருக்கு மகனா?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார் கமல்ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்ததன் காரணமாக தக் லைஃப் மீது உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார் கமல். இந்தப் படத்திலிருந்து ஜிங்குச்சா என்ற முதல் சிங்கிள் நேற்று வெளியானது.
கமல்ஹாசன் தனது சினிமா பயணத்தின் இரண்டாவது இன்னிங்ஸை விக்ரம் படத்தில் ஆரம்பித்தார்.. லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டானார். அதன்படி கடைசியாக அவரது நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இப்போது மணிரத்னம் இயக்கியிருக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

கமல் - மணிரத்னம் கூட்டணி: கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்க்கிறார்.
இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், விருமாண்டி அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி செர்பியா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்தது.
தக் லைஃப்பில் சிம்பு: இதற்கிடையே படத்தில் கமிட்டாகியிருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் படத்திலிருந்து வெளியேறிவிட்டார்கள். அதேசமயம் சிம்பு இந்தப் படத்தில் இணைந்தார். முதன்முதலாக கமலுடன் சிம்பு நடித்திருப்பதன் காரணமாக அவருக்கு என்ன மாதிரியான கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பு உச்சக்கட்டமாக எழுந்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்திலிருந்து முதல் சிங்கிளான ஜிங்குச்சா நேற்று பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. அந்த விழாவில் கமல் ஹாசன், மணிரத்னம், சிம்பு, திரிஷா, அபிராமி, ரவி.கே.சந்திரன் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.
என்ன கதை?: இந்நிலையில் தக் லைஃப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது குறித்து பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். தனது யூடியூப் சேனலில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "தக் லைஃப் படத்தில் கமலும் மணியும் மீண்டும் இணைந்திருப்பதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. பலருக்கும் அதன் கதை என்னவாக இருக்கும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. நம்முடைய சோர்ஸ்படி படத்தின் கதை குறித்து தெரியவந்திருக்கிறது.
படத்தின் கதை, சிம்புவின் கேரக்டர்: அதாவது ராஜஸ்தானில் ஆங்கிலேயர்கள் காலத்தில் தக்கர்கள் என்றொரு கூட்டத்தினர் இருந்தார்கள். அவர்களது மெயின் தொழிலே கொள்ளையடிப்பது, வழிபறி செய்வதுதான். அவர்களை முதலில் ஆங்கிலேயர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஆங்கிலேயே கலெக்டர் ஒருவரை அவர்கள் கொன்றுவிட்ட பிறகு அவர்களை அழிக்க தொடங்கிவிட்டார்கள். அதுதொடர்பாகத்தான் இந்தப் படத்தின் கதை இருக்கும் என்று சொல்கிறார்கள். அதேபோல் இந்தப் படத்தில் கமல் ஹாசனுக்கு சிம்பு எதிரியா, மகனா இல்லை மருமகனா என்ற ஆவலும் பலரிடம் எழுந்திருக்கிறது. அதை மட்டும் ரகசியமாக வைத்திருக்கிறார்கல்" என்றார்.


Click it and Unblock the Notifications











