விக்ரம் சுகுமாரன் உயிரிழப்பு.. உடனிருந்தவர்கள் முதுகில் குத்தினார்கள்.. பிரபலம் ஓபன்
சென்னை: மதயானை கூட்டம் படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் விக்ரம் சுகுமாரன். அதுமட்டுமின்றி ஆடுகளம் படத்தை வெற்றிமாறன் இயக்கியபோது முழுக்க முழுக்க உடன் இருந்தது விக்ரம்தான். அவர் கடைசியாக இராவண கோட்டம் படத்தை இயக்கினார். அதில் சாந்தனு, பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். ஆனால் படம் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஒரு படம் இயக்குவதற்கான வேலைகளுக்கு திட்டமிட்டிருந்த அவர் திடீரென உயிரிழந்தார்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் விக்ரம் சுகுமாரன். வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரான இவர் ஆடுகளம் படத்துக்கு கள ஆய்வு செய்தது, பல வேலைகளை செய்தவர். அதுமட்டுமின்றி மதயானைக்கூட்டம் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தில் கதிர், ஓவியா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ரசிகர்களின் கவனம் ஈர்த்த மதயானைக்கூட்டம்: மதயானைக்கூட்டம் படமானது கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடக்கும் மொய் விருந்து பற்றியும், உறவுகள் பற்றியும், அதற்குள் எழும் சிக்கல்கள் பற்றியும் படு ராவாக படத்தை உருவாக்கியிருப்பார் விக்ரம் சுகுமாரன். வசூல் ரீதியாக அந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. அதேசமயம் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை பேசுவதாக அந்தப் படத்தின் மீது சிலர் விமர்சனம் வைத்தனர்.

வாழ்வியல் படம்தான்: ஆனால் அது சாதிய படமில்லை வாழ்வியல் படம்தான் என ஒரு தரப்பினர் கூறினர். படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் அட்டகாசமாக அமைந்திருக்கும். உதாரணமாக கதிரை கலையரசன் தனது வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு வரும்போதும்; அப்போது தனது உறவினர்களை ஜாடை மாடையாக பேசும் காட்சி இன்றுவரை பலரது ஃபேவரைட். அந்தக் காட்சியை அவ்வளவும் நேட்டிவிட்டியாக படமாக்கியிருப்பார் விக்ரம் சுகுமாரன்.
இராவண கோட்டம்: மதயானை கூட்டத்திற்கு பிறகு படம் ஏதும் இயக்காமல் இருந்த விக்ரம் சுகுமாறன் சாந்தனுவை வைத்து இராவண கோட்டம் படத்தை ஆரம்பித்தார். இதில் கயல் ஆனந்தி, பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மதயானைக்கூட்டம் கொடுத்த இயக்குநரின் படம் என்பதால் இப்படத்தின் மீது சினிமா ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்தப் படமோ படுதோல்வியை சந்தித்தது.
உயிரிழந்த விக்ரம்: சூழல் இப்படி இருக்க அவர் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் இறங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் சென்னைக்கு வந்துகொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவரது உயிரிழப்பு குறித்து பிரபல பத்திரிகையாளரான சுபைர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
சுபைர் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் விக்ரம் சுகுமாரன் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. சூரியை வைத்து விக்ரம் சுகுமாரன் ஒரு படம் செய்வதாக இருந்தார். ஆனால் அந்தப் படம் நடக்கவில்லை. அது கொஞ்சம் அவருக்கு அப்செட்டை கொடுத்தது. அதேபோல் விஜய் சேதுபதியை வைத்தும் ஒரு படத்தை திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அவரைப் பற்றி அவருடன் இருந்தவர்களே விஜய் சேதுபதியிடம் சென்று, விக்ரம் சுகுமாரன் ஒரு கோபக்காரர். அவருடன் எப்படி படம் செய்கிறீர்கள் என்று சொன்னார்கள். இது விக்ரம் சுகுமாரன் காதுகளுக்கும் வந்துவிட்டது. தன்னுடன் இருந்தவர்களே இப்படி தன்னை பற்றி இல்லாததை சொல்கிறார்கள் என்ற மன அழுத்தம் இருந்தது. அதுகுறித்து அவர் பலரிடம் புலம்பிக்கொண்டிருந்தார். அவர் யாரை சொல்கிறார் என்று திரைத்துறையில் இருப்பவர்களுக்கு தெரியும். அவர் பெரிய கனவோடு சினிமாவில் இருந்தவர். சினிமாவில் அடுத்தக்கட்டத்துக்கு போக முடியவில்லையே என்ற ஏக்கமும் அவரிடம் இருந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











