Ajith - விஜயகாந்த்துக்கு இரங்கல் தெரிவித்ததை அஜித் பப்ளிசிட்டி செய்யவில்லை.. பத்திரிகையாளர் சொன்ன சீக்ரெட்
சென்னை: விஜயகாந்த் உடலுக்கு அஜித் அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை இரங்கலும் தெரிவிக்கவில்லை என்ற பேச்சு பலமாகவே எழுந்திருக்கிறது. மேலும் இது அஜித்திற்கு கண்டனங்களையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் அதுகுறித்து பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் அவர் சொல்வதும் சரிதானே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.

விடாமுயற்சி: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே மாதம் படத்தின் பெயர் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் படத்திலிருந்து வரவில்லை. இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்துவருகிறது. அஜித்தும் மும்முரமாக அதில் கலந்துகொண்டு நடித்துவிட்டு தற்போது குட்டி பிரேக் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பிரேக்கில் அவர் தனது குடும்பத்தினருடன் முழுமையாக நேரத்தை செலவிட்டுவருகிறார். அதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகின.
நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மங்காத்தாவுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் அர்ஜுன் இணைந்திருப்பதால் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். சமீபத்தில்கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அஜித் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகின.
ஒதுங்கிய அஜித்: அஜித்தை பொறுத்தவரை தன்னுடைய வேலை படத்தில் நடிப்பது மட்டும்தான். அதை தவிர்த்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டேன் என்பதுதான் அவருடைய நிலைப்பாடு. அதேபோல் பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவர் ஈடுபடுவதில்லை. கடைசியாக அவர் அசல் படத்துக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரில் வராத அஜித்: இந்த சூழலில் விஜயகாந்த் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு திரையுலக பிரபலங்கள் பெரும்பாலானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் இரங்கலும் தெரிவித்தனர். ஆனால் அஜித்தோ இதுவரை நேரிலும் வரவில்லை; இரங்கலும் தெரிவிக்கவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது என்று ஒருதரப்பினர் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துவருகின்றனர்.
பத்திரிகையாளர் சொன்ன தகவல்: இந்நிலையில் அஜித்துடன் நெருங்கிய பழகியவரும், பத்திரிகையாளருமான வி.கே.சுந்தர் இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் அளித்திருக்கும் பேட்டியில், "விஜயகாந்த் மறைவை அறிந்த அஜித் உடனடியாக சுதீஷுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டார். அதை பிரேமலதாவிடமும் தெரிவிக்க சொல்லிவிட்டார். விவேக் மறைவுக்கு அன்று இரவே வந்து அஜித் அஞ்சலி செலுத்தினார். அதேபோல் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கும் மறுநாள் அவரது வீட்டுக்கு சென்றார்.
இதுதான் காரணம்: விஜயகாந்த் உடலுக்கு அஜித் அஞ்சலி செலுத்த வராததற்கு காரணம் ஷூட்டிங்தான். ஒருவேளை அவர் வந்திருந்தால் மூன்று நாட்கள் கேப் விழுந்திருக்கும். இது விடாமுயற்சி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் இடையூறை ஏற்படுத்து என்ற காரணத்தால்தான் அவர் வராமல் இருந்திருக்கிறார். இரங்கல் செய்தி என்பது அஜித்துக்கும் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கும் உள்ள விஷயம். அதை பப்ளிசிட்டி செய்வதை அஜித் எப்போதும் விரும்பமாட்டார்" என்றார்.
இதனை பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர் அஜித் செய்தது சரிதானே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அதேசமயம் மற்றொரு தரப்பினரோ சரி பப்ளிசிட்டி செய்ய வேண்டாம். ஆனால் விஜயகாந்த்தின் நினைவிடத்துக்கு வந்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











