வயதை காரணம் காட்டுவது கீழ்த்தரமான செயல்… ஆத்திரமடைந்த பிரபல நடிகை!
நியூயார்க்: சினிமா வாய்ப்புக்கு வயதை காரணம் காட்டுவது மிக கீழ்த்தரமான செயல் என ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜூலியா ராபர்ட்ஸ். கடைசியாக பென் இஸ் பேக் திரைப்படத்தில் நடித்திருந்தார். 51 வயதாகும் இவர் தற்போதும் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், சினிமா வாய்ப்புகளுக்கு வயதை முக்கிய காரணியாக பார்க்கும் எண்ணம் மிக கீழ்த்தரமானது என விமர்சித்துள்ளார்.
வயதான நடிகைகளைப் பார்த்து, உங்களுக்கு வயதாகிவிட்டது, சினிமாவில் உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது. நீங்கள் வீட்டிற்குப் போகலாம் என்ற தொணியில் வாய்ப்பு மறுக்கப்படுவது மிக கீழ்த்தரமான செயல். அதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று தசாப்தங்களாக வெற்றிகரமான நடிகையாக இருக்கிறேன். அதற்காக தன்னை மிகச் சிறந்தவள் என சொல்லவில்லை என்று கூறும் அவர், அவருக்கு பிடித்த வேலையை செய்யும் அதிர்ஷ்டக்காரியாக இருப்பதாக குறிப்பிடுகிறார்.
முப்பது வருட திரைவாழ்க்கை என்பது நீண்ட பயணம் தான், அதை நான் பெருமையாகவும், நிறைவாகவும் உணர்கிறேன் எனக் கூறும் ஜூலியா ராபர்ட்ஸ், சமீப காலங்களில் பல நடிகைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாக சொன்னதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











