நடிகை ஜோதிகாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் பிரபல எழுத்தாளர் பொன் பார்த்திபன்!
சென்னை : நடிகை ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது முழுவீச்சில் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருகிறார் .
36 வயதினிலே, மகளிர் மட்டும், காற்றின் மொழி ,பொன்மகள் வந்தாள், ஜாக்பாட், ராட்சசி ஆகிய படங்களை தொடர்ந்து இப்பொழுது இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் உடன்பிறப்பே என்ற படத்தில் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி உடன் இணைந்து நடித்து வருகிறார் .
இந்நிலையில் மாஸ்டர், கைதி,ஹீரோ, இரும்புத்திரை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு வசனம் எழுதிய பிரபல எழுத்தாளர் பொன் பார்த்திபன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சினிமாவுக்கு ரீ-என்ட்ரி
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து கடந்த 2006ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.

உடன்பிறப்பே
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகளை பெரும்பாலும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா சமூக அக்கறை கொண்ட படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் . 36 வயதினிலே படத்தின் வெற்றிக்குப் பிறகு மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி மற்றும் கடைசியாக வெளியான பொன்மகள் வந்தாள் என இவரது நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று வருகிறது. இப்பொழுது கத்துக்குட்டி பட இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் "உடன்பிறப்பே" படத்தில் நடித்து வருகிறார்.

மருத்துவமனைகளை பராமரிக்க
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வந்தது. அதில் சில காட்சிகள் தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் படமாக்கப்பட்ட போது மருத்துவமனை வளாகம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததைக் கண்டு மனம் நொந்து விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இதைப்பற்றி கூறியதோடு கோவில்களுக்கு நன்கொடை அளிப்பது போல அரசு மருத்துவமனைகளை பராமரிக்கவும் அனைவரும் நன்கொடை வழங்க வேண்டும் என கூறியிருந்தது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது.

இரா.சரவணன் இயக்கத்தில்
இதை அடுத்து ஜோதிகா சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு சொந்த செலவில் தேவையான உபகரணங்கள் நன்கொடையாக அளித்தது மட்டுமல்லாமல் மருத்துவமனை வளாகத்தையும் புதுப்பொலிவுடன் செய்து கொடுத்தது அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெற்றது. படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் மற்ற நடிகர் நடிகைகளைப் போல் கண்டும் காணாமல் செல்லாமல் அதைப் பற்றி பேசியதோடு செயல்படுத்தியும் காட்டிய ஜோதிகா, இரா.சரவணன் இயக்கத்தில் நடித்து வந்த உடன்பிறப்பே படத்தில் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி உடன் இணைந்து நடித்து வருகிறார்.

நேரடியாக ஓடிடியில்
அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படம் கிழக்கு சீமையிலே, பாசமலர் ஆகிய படங்களின் வரிசையில் நிச்சயமாக இடம் பெறும் என படக்குழு தெரிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை உண்டாக்கியுள்ளது. உடன்பிறப்பே திரையரங்குகளில் வெளியாகும் என நினைத்துக் கொண்டிருக்கும் அதே சமயம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாக உள்ளது.

எழுத்தாளர் பொன் பார்த்திபன்
இந்த நிலையில் ஜோதிகா அடுத்ததாக பிரபல எழுத்தாளர் பொன் பார்த்திபன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எழுத்தாளர் பொன் பார்த்திபன் ஆரம்பத்தில் இயக்குனர் ஹரியுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு மென்மையான படங்களுக்கு பெயர் போன இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த உப்புக்கருவாடு மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார்.

டாப் நாச் வசனங்கள்
தொடர்ந்து ராதாமோகன் இயக்கிய பிருந்தாவனம், காற்றின் மொழி போன்ற படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். இப்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிஎஸ் மித்ரன் திரைப்படங்களில் வரிசையாக பணியாற்றி வருகிறார். இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ, இரும்புத்திரை போன்ற படங்களுக்கு தன்னுடைய டாப் நாச் வசனத்தின் மூலம் தெறிக்க விட்டிருந்த பொன் பார்த்திபன் மூன்றாவது முறையாக பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் படத்திற்கும் வசனம் எழுதுகிறார். இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க அதில் இரட்டை வேடம் என கூறப்படுகிறது.
Recommended Video

மாஸ்டர்
இயக்கிய மூன்றே திரைப்படத்தில் இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள லோகேஷ் கனகராஜ் கைதி என்ற மெகாஹிட் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தையும் இயக்கி அந்த படமும் ப்ளாக் பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது . அடுத்ததாக தனது கலையுலக குருவான கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி மற்றும் பஃகத் ஃபாசில் வில்லன் பாத்திரங்களில் நடிக்கின்றனர்

இயக்குனர் அவதாரம்
லோகேஷ் கனகராஜின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த கைதி மற்றும் மாஸ்டர் ஆகியப் படங்களிலும் பொன் பார்த்திபன் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் தனது வசனங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்த எழுத்தாளர் பொன் பார்த்திபன் இப்பொழுது இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார்.

அதிகாரபூர்வ அறிவிப்பு
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஜோதிகா அடுத்து நடிக்கும் திரைப்படத்தை பொன் பார்த்திபன் இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். அதன் முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் செப்டம்பர் மாதம் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நடிகர், நடிகைகளின் பட்டியல் வெளியாக உள்ளது. இதுவரை வசனங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பொன் பார்த்திபன் இயக்குனராகவும் தனி இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது . இதற்கிடையில் விஷால், சுனைனா இணைந்து நடிக்கும் விஷால் 32 படத்திற்கும் பொன் பார்த்திபன் வசனம் எழுத ஒப்பந்தமாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











