ஜோதிகாவின் சூப்பர் ஹிட் திரைப்படம் துபாய் எக்ஸ்போவில் தேர்வானது!
சென்னை : நடிகை ஜோதிகா சினிமாவில் ரீ-என்ட்ரீ கொடுத்து தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருகிறார்.
மொழி வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்த காற்றின் மொழி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வெற்றி பெற்றது.
இந்த நிலையில் துபாய் எக்ஸ்போவில் ஜோதிகாவின் காற்றின் மொழி திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது படக்குழுவை மகிழ்ச்சி படுத்தி உள்ளது.

ராதா மோகன் இயக்கத்தில் காற்றின் மொழி
தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்படும் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ஜோதிகா எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிகச் சரியாக செய்து முடிக்கக் கூடிய மிகச் சிறந்த நடிகையாவார். ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தால் இப்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார்.அந்த வகையில் 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா அதை அடுத்து இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான காற்றின் மொழி என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

வாய் பேச முடியாத பெண்ணாக
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா ஏற்கனவே மொழி என்ற திரைப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பல விருதுகளையும் பெற்று இருப்பார். இன்றுவரை ஜோதிகாவின் திரைவாழ்க்கையில் வெளியான ஆகச் சிறந்த படங்களில் ஒன்றாக மொழி இருந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் ராதாமோகன் ஜோதிகா கூட்டணியில் உருவான காற்றின் மொழி திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

ரேடியோவில் ஆர்ஜே - வாக சாதிக்கிறார்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக விதார்த் நடித்திருந்தார் . மேலும் எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஒரு சராசரி குடும்ப பெண்மணி எப்படி ரேடியோவில் ஆர்ஜே - வாக சாதிக்கிறார் என்பதே இப்படத்தின் கதைக் களமாக அமைந்தது. இந்தியில் வெளியான 'தும்ஹாரி சூலு' என்ற படத்தின் ரீமேக்காக இப்படத்தை ராதா மோகன் இயக்கியிருந்தார். ஜி தனஜெயன் இப்படத்தை தயாரித்திருந்தார்.

துபாய் எக்ஸ்போவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது
குடும்ப ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பாராட்டுக்களை பெற்ற இந்த திரைப்படம் இப்போது துபாய் எக்ஸ்போவில் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்பட விழாவில் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது படக்குழுவை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது


Click it and Unblock the Notifications











