ஜோதிகாவின் 50வது படம்.. வெளியானது உடன் பிறப்பே படத்தின் போட்டோக்கள்.. ரிலீஸ் தகவலும் அறிவிப்பு!
சென்னை: ஜோதிகாவின் 50வது படமான உடன்பிறப்பே படத்தின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தி படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் வாலி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் ஜோதிகா.
வாலி படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்த ஜோதிகா அதன்பிறகு சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் இணைந்து நடித்தார். அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்தார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக படங்கள்
நடிகை ஜோதிகா அஜித், விஜய், ரஜினி, கமல், சிம்பு, மாதவன், பிரசாந்த், விக்ரம், அர்ஜூன், பிரித்திவி ராஜ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார் ஜோதிகா. அஜித்துடன் முகவரி, பூவெல்லாம் உன் வாசம், ராஜா ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து விஜய்யுடன் குஷி, திருமலை ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சூர்யாவுடன் அதிகமாக 7 படங்கள்
அவரது நடிப்பில் வெளியான மொழி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். பூவெல்லாம் கேட்டுப்பார். உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் ஆகிய 7 படங்களில் நடித்துள்ளார்.

சூர்யாவுடன் ஜோதிகாவுக்கு காதல் மலர்ந்தது
சூர்யாவுடன் படங்களில் சேர்ந்து நடித்த போது அவருடன் ஜோதிகாவுக்கு காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து பல ஆண்டுகள் காத்திருந்த இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் என பலரும் அவர்களின் திருமணத்தில் பங்கேற்றனர்.

மீண்டும் சினிமாவுக்கு என்ட்ரி
திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார் ஜோதிகா. இந்த தம்பதிக்கு தியா, தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு 2015ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் நடிகை ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரங்களிலேயே நடித்து வருகிறார் ஜோதிகா.

ஜோதிகாவின் 50வது படம் உடன்பிறப்பே
அந்த வகையில் மகளிர் மட்டும், நாச்சியார். செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் பெரும்பாலும் அவரை மைய்யப்படுத்தியே வெளி வந்துள்ளது. இந்நிலையில் நடிகை ஜோதிகா தனது 50வது படமாக உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கத்துக்குட்டி பட இயக்குநர் சரவணன்
கத்துக்குட்டி படத்தை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்கி வருகிறார். கத்துக்குட்டி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதும் வசூல் ரீதியாக சோபிக்கவில்லை. இந்நிலையில் ஜோதிகாவின் 50வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் சரவணன். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜோதிகாவுக்கு அண்ணனாக சசிக்குமார்..
இதில் ஜோதிகாவுக்கு அண்ணனாக சசிக்குமாரும், கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி
இந்தப் படத்தின் கதை அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தியதாக இருக்கும் என்றும் கணவருக்கும் அண்ணனுக்கும் இடையில் பாசமிகு தங்கை சிக்கி தவிப்பதுமாகவும் இந்தப் படம் இருக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் போட்டோக்கள் சில சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.

மூக்கில் இரண்டு மூக்குத்தி
அந்த போட்டோக்களில் ஜோதிகா பக்கா கிராமத்து பெண்ணாக மூக்கில் இரண்டு மூக்குத்தி, சுங்குடி சேலை, கொண்டை என வேறு மாதிரி உள்ளார். மேலும் படத்தில் நடித்து மற்ற நட்சத்திரங்களின் போட்டோக்களும் வெளியாகியுள்ளது. இதில் குடும்பத்துடன் தட்டு மாற்றுவது பொங்கல் வைப்பது போன்ற பல போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











