"புதிய விடிவெள்ளி CM விஜய்" தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்கள் புகழாரம்
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பதவியேற்றதில் இருந்து, திரையுலகினர் பலரும் அவரது நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தனர்.
தமிழ்நாட்டின் அரசியலை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட அரசியல் தான் தீர்மானிக்கிறது என்றாலும், அவர்களுக்கு எல்லாம் திரைத்துறையுடன் ஏதாவது தொடர்பு இருந்து கொண்டே இருந்தது, அது இப்போதும் முதலமைச்சர் விஜய் மூலம் தொடர்கிறது. இதில் சினிமாவுக்குச் சம்மந்தமில்லாத திராவிடக் கட்சி முதலமைச்சர்கள் என்றால் அது அதிமுக சார்பில் முதலமைச்சராக பதவி வகித்த, ஒ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி கே பழனிசாமி என இருவர் மட்டும் தான்.

மற்றபடி பேரறிஞர் அண்ணா தொடங்கி, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், ஜோசப் விஜய் என அனைவரும் தமிழ் சினிமாவில் அங்கம் வகித்தவர்கள் தான். இப்படி இருக்கையில் , தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதில் இருந்து பெரும்பாலும் திரையுலகில் இருந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறர்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நேரில் சென்றும் வாழ்த்தி வந்தனர்.
புதிய விடிவெள்ளி: இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தனர். இது தொடர்பாக மூத்த இயக்குநரும் திரைக்கதை மன்னருமான பாக்யராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், "தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தமிழக மக்களால் புதிய விடி வெள்ளியாய் உதிக்க வைத்த முதல்வர் விஜய் அவர்களை, 'நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற'என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளால் வாழ்த்தினோம்" என்று பதிவிட்டுள்ளார்.

சாந்தனு: அவரது இந்த பதிவுக்கு, இணையவாசிகள், ரசிகர்கள், தவெகவினர் பலரும் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். அதேபோல் பாக்யராஜின் மகன் சாந்தனு மற்றும் சாந்தனுவின் மனைவி கிகி ஆகியோர் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தது தொடர்பாகவும் தங்களது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications