பூர்ணிமாவைத் தனியே தவிக்கவிட்டுச் சென்ற பாக்யராஜ்.. 40 ஆண்டுகால காதல் பந்தம் பிரிந்தது!
சென்னை: தமிழ் திரையுலகில் அசாத்தியமான கதை சொல்லும் முறையாலும், சாதாரண விஷயத்தையும் சுவாரஸ்யமாக மாற்றும் திறமையாலும் 'திரைக்கதை மன்னன்' என்று அழைக்கப்பட்ட கே.பாக்யராஜ், தனது 73-வது வயதில் மாரடைப்பு காரணமாகச் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இந்த திடீர் மறைவு கோலிவுட் வட்டாரத்தில் ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மனைவி பூர்ணிமாவின் நிலைமை தான் அத்தனை பேரின் நெஞ்சையும் ரணமாக்கியுள்ளது.
டார்லிங் படத்தில் மலர்ந்த காதல் : இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் இருந்து, அவராலேயே நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்ட கே.பாக்யராஜ், பின்னாளில் தமிழ் சினிமாவின் முடிசூடா தளபதியாக உயர்ந்தார். ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையைச் சுற்றியே தனது கதைகளை அமைத்து முத்திரை பதித்த பாக்யராஜின் நிஜ வாழ்க்கைத் திரைக்கதையில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது, நடிகை பூர்ணிமாவுடனான காதல் தான்.

காதல் திருமணம்: கடந்த 1982-ல் கே. பாக்யராஜ் இயக்கி, நாயகனாக நடித்த 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தில் பூர்ணிமா கதாநாயகியாக நடித்தார். அந்தப் படப்பிடிப்புத் தளத்தில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் ஆழமான காதலாக மாறியது. தொடர்ந்து 1984 பிப்ரவரி 7 அன்று இவர்களது திருமணம் ஒட்டுமொத்தத் திரையுலகினர் முன்னிலையில் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு பூர்ணிமா தனது உச்சகட்ட சினிமா மார்க்கெட்டைத் துறந்து, முழுமையாகப் பாக்யராஜின் நிழலாகக் குடும்பப் பொறுப்பைக் கவனித்துக் கொண்டார்.
40 ஆண்டுகாலப் பந்தம்: பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியின் 40 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையில், தமிழ் திரையுலகில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியாக இருந்தாலும், சினிமா விழாவாக இருந்தாலும் இருவரும் எப்போதும் இணைந்தே வருவது இவர்களது தனித்துவமான பழக்கமாகும். ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல், எங்கு சென்றாலும் கைகளைப் பிடித்துக்கொண்டு நிழல் போல இருப்பார்கள்.

கடைசி சந்தோஷம்: நேற்று முன்தினம் நடிகை குஷ்புவின் மகள் திருமணம் கோவாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற போது, அங்கு நடைபெற்ற கொண்டாட்டங்களில் கே. பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா தம்பதியினர் வழக்கம்போல ஜோடியாக, கை கோர்த்தபடி மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். அதுவே அவர்கள் இருவரும் இணைந்து பொதுவெளியில் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சியாக மாறும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். 40 வருடங்களாகத் தன் முந்தானை முடிச்சாக, தன் மூச்சாகக் கூடவே இருந்த கணவர் பாக்யராஜை இழந்துவிட்டுத் தவிக்கும் பூர்ணிமாவைத் தேற்ற வார்த்தைகளின்றி ஒட்டுமொத்தக் கோலிவுட்டும் அழுதுகொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications