புன்னகையே புயலாய்..க/பெ.ரணசிங்கம்.. பெரியார் பிறந்த நாளில் பெண் விடுதலை தேசிய கீதமே படைத்த வைரமுத்து
சென்னை: நடிகர் விஜய்சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படத்தின் 2-வது பாடல் இன்று வெளியிடப்பட்டது. புன்னகையே புயலாய் மாறும் போது.. என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் இந்த பாடல் பெண் விடுதலையின் தேசிய கீதமாகவே ஒலிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இயக்குநர் விருமாண்டியின் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் படம் க/பெ. ரணசிங்கம். இந்தப் படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

இன்று மாலை இப் படத்தின் 2-வது பாடல் வெளியிடப்பட்டது. பாடலை கேட்பவர்களின் உள்ளத்தில் நியாய கோபத்தின் உச்சத்தை உரத்துச் சொல்கிறார்.. ஜனநாயகத்தின் உச்சக் கட்டுப்பாட்டுடனான அறப்போரை அழுத்தி பிரகடனம் செய்கிறார் கவிப்பேரரசர்.
சிறு பூங்கிளியே.... புலியாய் நீயும் மாறு.. புலி.. புலி என்கிற வரிகளில் மனிதகுலத்தின் முதல் தற்கொடையாளர் பாட்டி குயிலி அம்மாள் தொடங்கி முள்ளிவாய்க்கால் இசைப்பிரியாக்கள் வரையிலான தமிழ்ப் போராளிகள் கண்முன் நின்று விடுகின்றனர்

விதி....யா சதி....யா அதிகாரத்தின் மீது அடியே நீயும் மோது வரிகளிலும்
பட்டிக்காட்டுப் பெண்ணு சொல்லு பார்லிமெண்ட்ல் கேட்குமா வரிகளாகட்டும்...
இலக்கை அடையாமலே... விலங்கு உடையாமலே.. இவள் வளையல் உடையாதடா.. இவளும் கூட இந்திய ரத்தம்.. அரசமைப்பு சொல்லுது வரிகளாகட்டும் நீட் தேர்வுக்காக மாண்டு போன அனிதாக்களையும் ஜெயஶ்ரீ துர்காக்களையும் ஏனோ கொண்டு வந்து நிறுத்திவிட்டு ரத்தக்கண்ணீரை வரவழைக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து!
வைரமுத்துவின் வரிகளிலேயே சொல்வதானால் 'வேலுநாச்சி வம்சகாரி' களுக்கு ஒரு விடுதலைக் கீதத்தைத்தான் க/பெ. ரணசிங்கம் படத்தில் காவியமாகவே தந்திருக்கிறார் என்பது மிகை ஒன்றும் இல்லை. பாடல்வரிகளை நெஞ்சில் நெருப்பாய் தைக்கும் வகையில் இசையை இறக்கியிருக்கிறார் ஜிப்ரான். க/பெ . ரணசிங்கத்தின் புன்னகையே பாடல் அதகளம்!


Click it and Unblock the Notifications











