18 யானைகளுடன் ஷூட்டிங்.. அந்த அனுபவத்தை ஓடிடி கொடுக்குமா? 'காடன்' ரிலீஸ் பற்றி பிரபு சாலமன் உறுதி!
சென்னை: 'காடன்' படத்தை தியேட்டரில் பார்த்தால்தான் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் என்று இயக்குனர் பிரபு சாலமன் சொன்னார்.
கண்ணோடு காண்பதெல்லாம், கிங், கொக்கி, லீ, மைனா, கும்கி, கயல், தொடரி உட்பட பல படங்களை இயக்கியவர், பிரபு சாலமன்.
இப்போது காடன், கும்கி 2 படங்களை இயக்கி முடித்துள்ளார். காடன் படம் மூன்று மொழிகளில் உருவாகி இருக்கிறது.

ஹாத்தி மேரே சாத்தி
இந்தியில், ஹாத்தி மேரே சாத்தி என்ற பெயரிலும் தெலுங்கில் ஆரண்யா என்ற பெயரிலும் இந்தப் படம் உருவாகி உள்ளது. 1971 ஆம் ஆண்டு ராஜேஷ் கண்ணா, தனுஜா நடிப்பில் சாண்டோ சின்னப்பா தேவர் இந்தியில் உருவாக்கிய படம், ஹாத்தி மேரே சாத்தி. எம்.ஏ.திருமுகம் இயக்கி இருந்தார்.

விஷ்ணு விஷால்
இதுதான் எம்.ஜி.ஆர் நடிப்பில் தமிழில், நல்ல நேரம் என்று ரீமேக் செய்யப்பட்டது. யானையை மையப்படுத்திய கதை என்பதால், இந்த டைட்டிலை அனுமதி பெற்று இந்தப் படத்துக்கு பயன்படுத்தி உள்ளனர். ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இதில் ராணா ஹீரோ. தமிழ் பதிப்புக்கு விஷ்ணு விஷால் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார்.

18 யானைகள்
ஸோயா ஹூசைன், ஸ்ரியா பிலோன்கர், ரோபோ சங்கர், அஸ்வின் ராஜா, ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். 2018 ஆம் ஆண்டு இதன் ஷூட்டிங் தொடங்கியது. தாய்லாந்து காடுகளில் 18 யானைகளுடன் சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அதோடு மூணாறு உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அடர்ந்த காடுகளிலும் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது.

கொரோனா வைரஸ்
விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த 'கும்கி படத்துக்கு பிறகு யானையை மையமாக வைத்து பிரபு சாலமன் மீண்டும் இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்து இருந்தது. இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இயக்குனர் பிரபு சாலமன்
இந்நிலையில், பல படங்கள் இப்போது ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. காடன் படமும் ஓடிடியில் வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. இதுபற்றி இயக்குனர் பிரபு சாலமனிடம் கேட்டபோது, 'காடன் கண்டிப்பாக தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும். பல யானைகளுடன் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தால்தான் அந்த அனுபவம் கிடைக்கும்.

ரசூல் பூக்குட்டி
அதோடு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி இதில் பணியாற்றி இருக்கிறார். அவர் உழைப்பையும் திறமையையும் தியேட்டரில், படத்தை வெளியிட்டால் மட்டுமே அனுபவிக்க முடியும். அதனால், ஓடிடியில் காடன் ரிலீஸ் ஆகாது. தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும். படம் ரெடியாகிவிட்டது. கும்கி 2 படமும் ரெடியாகிவிட்டது' என்றார்.


Click it and Unblock the Notifications











