Exclusive - திலோத்தமானு பெயர் வைக்க இதுதான் காரணம்.. காதல் மன்னன் சரண், மானு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான படம் காதல் மன்னன். கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த சரணின் முதல் படம் அது. மெகா ப்ளாக் பஸ்டர் ஆன அந்தப் படம் வெளியாகி இன்றோடு 26 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்தச் சூழலில் படத்தின் இயக்குநர் சரணும், கதாநாயகி மானுவும் பில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தனர். அதில் திலோத்தமா என்று மானுவுக்கு பெயர் வைத்ததற்கான காரணத்தை சரண் பகிர்ந்திருக்கிறார்.
கோலிவுட்டின் டாப் 5 நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு படம் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை அடுத்து அவர் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படம் ஆக்ஷன் ஜானரில் உருவாகிவருகிறது. படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் முடிந்து அடுத்தக்கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. இப்போது ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தாலும் அஜித்குமார் தனது ஆரம்பகாலத்தில் காதல் கதைகளில் நடித்து பிரபலமானவர்.

காதல் மன்னன் அஜித்குமார்: அஜித் நடித்த காதல் படங்களில் காதல் மன்னன் படத்துக்கு தனியிடம் உண்டு. இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சரணின் முதல் படம் காதல் மன்னன். இப்படத்தில் விவேக், கரண், மானு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நிச்சயதார்த்தம் ஆன பெண்ணை காதலிக்கும் ஹீரோ என்ற லைனோடு உருவான படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் ஆரம்பித்த அஜித் - சரண் கூட்டணி அமர்க்களம், அட்டகாசம், அசல் என நீண்டது. மேலும் இந்தப் படத்துக்கு பிறகு அஜித்திற்கு ஏராளமான பெண் ரசிகைகளும் உருவாக ஆரம்பித்தனர்.
காதல் மன்னனில் எம்.எஸ்.விஸ்வநாதன்: காதல் மன்னன் படத்தில் ஏகப்பட்ட சிறப்புகள் இருந்தாலும் அதில் முதல் சிறப்பு மெல்லிசை மன்னர் என அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன் நடித்தது. அதுவரை இசையின் மூலம் தமிழர்களை கட்டிப்போட்டிருந்த எம்.எஸ்.வி இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். படம் குறித்த அறிவிப்பு வெளியானபோது, எம்.எஸ்.விஸ்வநாதன் படத்தில் நடிப்பதை பலரும் ஆச்சரியமாகவே பார்த்தார்கள். அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை செம்மையாகவே செய்திருந்தார்.

ஃபேமஸான மானு: படத்தில் அஜித், எம்.எஸ்.வி, விவேக் உள்ளிட்டோர் ஹைலைட்டாக இருந்தாலும் படத்தின் நாயகி மானு அந்தப் படத்தின் மூலம் ஃபேமஸ் ஆனார். அந்தப் படத்துக்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்த அவர் கடைசியாக 2014ஆம் ஆண்டு வெளியான என்ன சத்தம் இந்த நேரம் படத்தில்தான் நடித்தார். அதற்கு பிறகும் அவர் நடிக்கவில்லை. மானு எந்த அளவு ஃபேமஸ் ஆனாரோ அதே அளவு படத்தில் அவரது கதாபாத்திர பெயரான திலோத்தமாவும் ஃபேமஸ் ஆனது.
எக்ஸ்க்ளூசிவ் பேட்டி: சூழல் இப்படி இருக்க காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி இன்றோடு 26 வருடங்கள் நிறைவடைவதால் சரணும், மானுவும் பில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தனர். அப்போது பேசிய மானு, "காதல் மன்னன் படத்தில் நான் நடித்தபோது எல்லாமே புதிதாக இருந்தது. அதாவது எனக்கு இன்னொருவர் ஷூ போட்டுவிடுவார். அதையெல்லாம் பார்க்கும்போது எதற்காக இன்னொருவர் எனக்கு ஷூ போட்டுவிட வேண்டும். நான் சாப்பிடும்போது இன்னொருவர் நின்றுகொண்டிருப்பார். நான் அவரிடம் எதற்காக நிற்கிறீர்கள் உட்காருங்கள் என்று சொல்வேன். அதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு பயமாக இருக்கும். வேறு ஒரு உலகத்தில் இருப்பது போல் இருந்தது" என்றார்.
திலோத்தமா பெயர் காரணம்: அவரைத் தொடர்ந்து பேசிய சரணிடம் திலோத்தமா என்று பெயர் வைக்க என்ன காரணம் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சரண், "ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா என்று சொல்வார்கள். முக்கியமாக ரம்பா, ஊர்வசி, மேனகா என்ற பெயரில் நடிகைகளும் அப்போது இருந்தார்கள். ரம்பா, ஊர்வசி, மேனகாவோடு எல்லோரும் முடித்துவிடுவார்கள். அடுத்து இருக்கும் திலோத்தமாவை விட்டுவிடுவார்கள். எனவே திலோத்தமா என்று பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
திலோத்தமாவை திலோ என்று கூப்பிடுவதற்கும் நன்றாக இருக்கும். பெயர் கொஞ்சம் Hardஆக இருக்கும். அதை பழக்கப்படுத்துவதற்காகத்தான் திலோத்தமா என்ற பெயரில் பாடலை வைத்தோம். அதன் பிறகு அந்த திலோத்தமா அவருக்கு அடையாளமாகவே மாறிவிட்டது. நிறைய பேருக்கு அவரின் பெயர் மானு என்றே தெரியாது. திலோத்தமா என்றுதான் நினைத்து கொண்டிருக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











