ரஜினியின் 2.0 நஷ்டம் - சூர்யாவின் காப்பானை யாரும் ஏறேடுத்து பார்க்கலயே
சென்னை: தென்னை மரத்தில தேள் கொட்டுனா... பனை மரத்தில நெறி கட்டுமாம். அந்த கதையா இருக்கு காப்பானுக்கு நேர்ந்த கதி. லைகா தயாரித்த ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தை வாங்கியதில் ஏற்பட்ட நஷ்டத்தினால், லைகாவின் அடுத்த தயாரிப்பான சூர்யா நடித்த காப்பான் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவுட் ரேட் முறையிலோ அல்லது விநியோக முறையிலோ காப்பானை வாங்க தயக்கம் காட்டுவதாகவும், வாங்கவும் வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
வெகு நாட்களுக்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனம் எழுத கே.வி.ஆனந்த் எழுதி இயக்கிருக்கும் அதிரடி திரில்லர் படம் காப்பான். இப்படம் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்படத்தின் வெளியீட்டில் சிக்கல்கள் உருவாகியுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது.

இப்படத்தில் சூர்யாவுடன், ஆர்யா மற்றும் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதோடு வெளிநாட்டு நடிகையான தில்யான போக்ளீவா முக்கிய கதாபாத்திரத்த்தில் நடித்துள்ளார். எம்.எஸ்.பிரபு மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இப்படத்தின் சூட்டிங் டெல்லி, ஹைதராபாத், நியூயார்க், பிரேசில் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர் கூட்டம் பெரும் ஆவலுடன் இருக்கையில் படம் வெளியிடுவதில் சிக்கல் என்று தெரிந்து குழப்பத்தில் உள்ளனர்.

இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தான் ரஜினிகாந்த் நடித்த இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தையும் தயாரித்துள்ளனர். அப்போது தயாரிப்பு நிறுவனம் விநியோகஸ்தரிடம் இருந்து பல கோடி ரூபாய் முன்பணமாக வாங்கியுள்ளனர்.
2.0 படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையாததால் வசூலும் கடுமையாகக் குறைந்து போனது. இதனால் விநியோகஸ்தர்களிடம் இருந்து பெற்ற முன் பணத்தை தயாரிப்பு நிறுவனத்தால் திருப்பி செலுத்த இயலவில்லை.

இந்த காரணத்தால் விநியோகஸ்தர்கள் சூர்யாவின் காப்பான் படத்தையும் வாங்குவதில் தயக்கம் காட்டுகிறார்கள். இப்படத்தை அவுட் ரேட் முறையிலோ அல்லது விநியோக முறையிலோ வாங்க தயக்கம் காட்டுவதாகவும், வாங்கவும் வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதனால் தான் காப்பான் திரைப்படம் வெளிவருவதில் சிக்கலா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா என இதுவரை எந்த ஒரு உறுதியான தகவலும் தெரியவில்லை. காப்பன் படம் வெளியாகும் வரை பொறுமையுடன் ரசிகர்களுடன் நாமும் காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications











