Kaavaalaa - காவாலா ஹிட்.. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.. பாடகி ஷில்பா ராவ்
சென்னை: Shilpa Rao (Shilpa Rao) காவலா பாடல் ஹிட்டாகியிருக்கும் சூழலில் அந்தப் பாடலை பாடிய ஷில்பா ராவ் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ஜெயிலர். மோகன் லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பான் இந்தியா படமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் ரிலீஸாகிறது. ரஜினியும், நெல்சனும் முதன்முறை இணைந்திருப்பதாலும் ரஜினியை நெல்சன் எப்படி யூஸ் செய்திருப்பார் என்பதை பார்ப்பதற்காகவும் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இரண்டு சிங்கிள்கள்: படத்தில் இடம்பெற்ற காவாலா மற்றும் ஹுக்கும் ஆகிய இரண்டு சிங்கிள் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. இதில் காவாலா பாடலில் தமன்னாவும், ரஜினிகாந்த்தும் நடனமாடியிருக்கின்றனர். பாடலை ஷில்பா ராவ் பாடியிருக்கிறார். காவாலா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் வரிகள் புரியவில்லை; நடனம் சரியில்லை போன்ற விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல் இந்தப் பாடலில் தமன்னா ஆடி ஸ்கோர் செய்துவிட்டார் ரஜினியை டம்மியாக்கிவிட்டார்கள் என்றும் ரசிகர்கள் புலம்பினர்.
மூன்றாவது சிங்கிள்; இந்தச் சூழலில் பாடலின் மூன்றாவது சிங்கிளான ஜுஜுபி பாடல் இன்று மாலை வெளியாகவிருக்கிறது. இரண்டாவது சிங்கிள் போல இந்தப் பாடலும் நிச்சயம் ரஜினியை புகழும்படி மாஸாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள். இதன் காரணமாக இன்று மாலை 6 மணியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் அவர்கள்.
ஷில்பா ராவ் பேட்டி: இந்நிலையில் காவாலா பாடலை பாடிய ஷில்பா ராவ் அந்தப் பாடல் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "காவாலா பாடல் இவ்வளவு வரவேற்பைப் பெறும் என்று நினைக்கவில்லை. இது அனைவரின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி ஹிட்டாகி இருக்கிறது. வெளிநாடுகளிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆச்சரியமாக இருக்கிறது: மக்களை, இசை எவ்வாறு ஒன்றிணைக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இசைக்கு மொழி பிரச்சனையில்லை என்பதை இது புரிய வைக்கிறது. இசை அமைப்பாளர் அனிருத், ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாகவும் சரியாகவும் உச்சரிக்கச் சொல்லிக் கொடுத்தார். அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்." என்றார்.
ஷில்பா ராவ் ஏற்கனவே தமிழில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் நான் மகான் அல்ல படத்தில் ஒரு மாலை நேரம் என்ற பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் பாடியிருக்கும் காவலா பாடல் 70 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. இந்தப் பாடலுக்கு பிறகு ஷில்பாவுக்கு தமிழில் தொடர்ந்து பாடல் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசை வெளியீட்டு விழா: இதற்கிடையே ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஜூலை 28ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக ரசிகர்களுக்கு 1000 இலவச பாஸ்கள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











