கபாலி 365! #Kabali365
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கேரியரில் மிகப் பெரிய வெற்றிப் படமான கபாலி வெளியாகி சரியாக ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனை ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு இதே நாளில் கபாலி படம் வெளியானது. கலைப்புலி தாணு தயாரிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கான விளம்பரங்களை புதுவிதமாகச் செய்திருந்தார் தயாரிப்பாளர் தாணு.

முதல் முறையாக விமானத்தில் ரஜினியின் உருவம் பொறிக்கப்பட்டு, கபாலி தலைப்பு இடம்பெற்றது. இது உலக அளவில் கவனம் ஈர்த்தது. படத்தில் ரஜினி இளைஞனாகவும், 60 வயது முதியவராகவும் நடித்திருந்தார். மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் படம் உலகெங்கும் வெளியானது. மலேசியா, சிங்கப்பூரில் இதுவரை வேறு எந்த மொழிப் படமும் வெளியாகாத அளவுக்கு அதிக அரங்குகளில் கபாலி வெளியானது.
திரையிட்ட இடங்களிலெல்லாம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்தது கபாலி. வசூலில் இந்தப் படம் புதிய சாதனைப் படைத்தாலும், வசூல் குறித்த அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
சென்னையில் 100 நாட்களைக் கடந்த கபாலி, மதுரை மணி இம்பாலாவில் 300 நாட்கள் வரை காலைக் காட்சியாக ஓடியது. இதனை திரையரங்க உரிமையாளரும் உறுதிப்படுத்தினார்.
இன்று கபாலி வெளியாகி 365 நாட்கள், அதாவது ஒரு ஆண்டு கடந்துவிட்டது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இணையத்தில் கபாலி முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











