அவள் எனக்கா மகளானாள்..நான் அவளுக்கு மகனானேன்..மகளை நினைத்து கபிலனின் உருக்கமான பதிவு!
சென்னை : பாடலாசிரியர் கபிலன் தற்கொலை செய்து கொண்ட மகள் தூரிகையை நினைத்து கண்ணீர் மல்க ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
பாடலாசிரியர் கபிலன் சினிமா உலகில் மிக பிரபலமான பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழ்ந்து வருகிறார்.
புதுச்சேரியில் பிறந்து வளர்ந்த கபிலன், விக்ரம் நடித்த 'தில்' படத்தில் உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா? என்ற பாடலை எழுதி தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

பாடலாசிரியர் கபிலன்
பாடலாசிரியரான கபிலன் ஆள்தோட்ட பூபதி, அர்ஜுனரு வில்லு, மச்சான் பேரு மதுர, ஆடுங்கடா என்ன சுத்தி, மெர்சல் ஆயிட்டேன், என்னோடு நீ இருந்தால் என 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். இவருடைய மகள் தூரிகை கபிலன் எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் திறமைகளை கொண்டவர்.

தூரிகை கபிலன்
பெண்களுக்காக 'Being Women' என்ற ஆங்கில ஆன்லைன் பத்திரிகையை நடத்தி வந்தார். காஸ்டியூம் டிசைனராக சினிமாவில் தன்னை ஒரு அங்கமாக நிலை நிறுத்திக் கொண்டவர் தூரிகை கபிலன். இவர் அசோக் செல்வன், ஜி.வி பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கும் பாவனி ரெட்டி, ரம்யா பாண்டியன், ஃபரினா என ஏராளமான சின்னத்திரை நடிகைகளுக்கும் காஸ்டியூம் டிசைன் செய்துள்ளார். தூரிகையின் ஒவ்வொரு டிசைனுமே கவனம் ஈர்த்து பெருமையாக பேசப்பட்டன.

தற்கொலை
கடந்த செப்டம்பர் மாதம் தூரிகை கபிலன் தனது வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதால், இந்த துயரமான முடிவை அவர் எடுத்ததாக முற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துரிகையின் தற்கொலை முடிவு அவரது நண்பர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கண்ணீர் பதிவு
இந்நிலையில், பாடலாசிரியர் கபிலன் தற்கொலை செய்து கொண்ட மகள் தூரிகையை நினைத்து கண்ணீர் மல்க ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்னும் 7 நாட்களில் மகள் கவிதைகள் என்று குறிப்பிட்டு பார் மகளே படத்தில் வரும் பாடல் வரியான இந்த வீட்டுக்கு விளக்கில்லை, சொந்த கூட்டுக்கு குயில் இல்லை, என் அன்புக்கு மகள் இல்லை, ஒரு ஆறுதல் மொழியில்லை என கண்ணீருடன் பதிவிட்டுள்ளார். கபிலனின் இந்த உருக்கமான பதிவினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











