Thaththuvamasi : ரோஜா இறங்கி குத்திய கிளாமர் பாட்டில்.. இப்படி ஒரு வாழ்க்கைத் தத்துவமா..
சென்னை: கிளாமர் பாடல்கள் என்பது தமிழ் சினிமாவில் பாடல் வரிகள் மற்றும் பாடலுக்கு நடனம் ஆடும் நடிகையின் ஆடை வடிவமைப்பு, துள்ளலான இசை ஆகியவற்றை வைத்து வகைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூன்றுமே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இந்த மூன்றும் சேர்ந்ததைப் போல ஒரு கிளாமர் பாடல் தான் இருக்க வேண்டும் என்று இயக்குநரும் தயாரிப்பாளரும் விரும்புவார்கள். அப்படி அமைக்கப்படும் கிளாமர் பாடல்கள் பாடல் ஆசிரியர்கள் போகிற போக்கில் ஒரு வாழ்க்கைத் தத்துவத்தை, நடைமுறை எதார்த்தத்தை சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். அப்படியான ஒரு பாடல் தான், காதல் கவிதை படத்தில் இடம் பெற்ற "ஆளான நாள் முதலா" பாடல்.
இந்த பாடல் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவானது. பாடலின் வரிகளை அகத்தியன் எழுதியுள்ளார். பாடலுக்கு ராஜூ சுந்தரம் மாஸ்டரும் நடிகை ரோஜாவும் நடனமாடி உள்ளார்கள். இந்த பாடல் முறைமாமனை பார்த்து, முறைப்பெண் தன்னைக் திருமணம் கொள்ளச் சொல்லி அன்புத் தொல்லை கொடுப்பது போலவும், அந்த அன்புத் தொல்லை தனக்கு வாழ்க்கை முழுவதும் தீரா தொல்லையாக மாறிவிடும் என்று முறைப்பெண்ணை திருமணம் செய்ய மறுக்கும் முறை மாமனுக்கும் இடையிலான உரையாடலாக அமைந்துள்ளது.
இந்த பாடலில் உள்ள சில வரிகள் எதார்த்த வாழ்க்கையை பிரதிபலித்து சுவாரஸ்ய மூட்டும் படியாக உள்ளது. அதாவது பாடலின் முதல் சரணத்தில் இடம் பெற்றுள்ள வரிகளான, "ஆடியில கட்டிகிட்டா சித்திரைக்கு புள்ள வரும், ஆகாது ஆகாது மச்சானே, இது தோதான தை மாசம் மச்சானே" இதை தமிழ்நாட்டில் பரவலாகவே புதுமண தம்பதிகளுக்கு சொல்லப்பட்டு வரும் அறிவுரை.

எதார்த்த வாழ்க்கை: அதாவது ஆடி மாதத்தில் கணவனும் மனைவியும் சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு சித்திரை மாதமான வெயில் காலத்தில் குழந்தை பிறக்கும். இது பிறக்கும் குழந்தைக்கு வெயிலின் தாக்கம் பாதிப்புகளையோ சிரமங்களையோ ஏற்படுத்தலாம். எனவே ஆடி மாதத்தில் கணவனும் மனைவியும் சேர்ந்து இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவார்கள். இன்றைய காலத்தில் பெரும்பாலும் மக்கள் அறிவுரைகளோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சிலர் ஆடி மாதத்தில் பெண்ணை அவரது தாயார் வீட்டிற்கே அனுப்பி வைக்கவும் செய்து விடுகிறார்கள்.
வாழ்க்கைத் தத்துவம்: அதேபோல் அடுத்த சரணத்தில் இடம் பெற்றுள்ள வரிகள் திருமணம் ஆன பல ஆண்களின் மனநிலை என்று கூறலாம். அந்த வரிகள் கேட்பதற்கும் சொல்வதற்கும் நகைப்பாக இருக்கலாம். அதாவது, உன்ன நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்ல, கல்லக் கட்டி தண்ணிக்குள்ள முங்குறவன் யாரும் இல்ல" தன்னுடனான திருமண வாழ்க்கைக்கு ஒரு பெண் ஒத்து வரமாட்டார் என்று தனக்குத் தோன்றும் ஒரு பெண்ணை எந்த ஆணும் திருமணம் செய்து கொள்ள மாட்டார். அதை விளக்கும் வரிகளாகத்தான் அவை உள்ளது. தனக்கு ஒத்து வராது என்கிற பெண்ணை ஒருவர் திருமணம் செய்துகொள்வது என்பது கல்லை உடலில் கட்டிக் கொண்டு கிணற்றிலோ, கடலிலோ குதிப்பதைப் போன்றது. அதாவது தற்கொலை செய்து கொள்வது போன்றது என்று கூறியுள்ளார் பாடலாசிரியர் அகத்தியன். இப்போது உங்களுக்கு " நக்கல்...யா உனக்கு" என்ற மீம் டெம்ப்ளேட் நினைவுக்கு வந்தால் சிரித்துக் கொள்ளுங்கள்.

வேண்டுதல்: அடுத்த சரணத்தில், "காளக் கண்ணு வாங்கி கட்டி பால் கறக்க ஆசைப்பட்டேன், கோழிக் குஞ்சு குட்டி போட கோயிலுக்கு நேந்துகிட்டேன், முட்டாளா இருக்கேடி மானே அடி ஒட்டாதே என் வாழ்க்க தானே" என்ற வரிகளும் மிகவும் முக்கியமானது. தன்னை முட்டாள் என்று காட்டிக்கொள்ள தான் கடவுளிடம் என்னவெல்லாம் வேண்டிக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். அதாவது காளை எப்போதும் பால் கறக்காது, ஆனால் காளை பால் கறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும், முட்டையிடும் கோழி குட்டி போட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டதாகவும், அதனால் தான் முட்டாள் எனவே என்னை திருமணம் செய்து கொண்டால் உனக்குத்தான் சிரமம் என்று சொல்லி எஸ்கேப் ஆக பார்க்கிறார்.
கிராமப்புறங்களில்: இந்த வரிகள் கிராமபுறங்களில் இப்போதும் முதியவர்கள் யாரவது முட்டாள் தனமாக ஏதாவது செய்து விட்டால் அல்லது சொல்லிவிட்டால் அவர்கள் செய்தது சரியானது அல்ல, பேசியது சரியானது அல்ல என்று சொல்வதற்கு காளைக் கன்னுல பால் வருமா என்று கேட்பார்கள். அதைத்தான் பாடலை எழுதிய அகத்தியன் இவ்வாறு மாற்றியுள்ளார். கொஞ்சம் நக்கலும் நையாண்டியும் நிறைந்த இந்த பாடலை பாடகர்கள் புஷ்வனம் குப்புசாமியும் சௌமியாவும் பாடியுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











