சினிமா திறமை இல்லாதவர்களை கோபுரத்தில் ஏற்றும்.. ஸ்டார் என்னோட பயோபிக்.. காதல் சுகுமார் பேட்டி!
சென்னை: நடிகர் கவின் நடிப்பில் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியான ஸ்டார் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சுகுமார், ஸ்டார் படம் என்னுடைய பயோபிக் தான் என்று பேட்டியில் கூறியுள்ளார்.
பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கிய திரைப்படம் ஸ்டார். இதில் கவினுடன் லால், அதிதி போகாங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பியேர் பிரேமா காதல் படத்தின் மூலம் இளன் ஏற்கனவே கவனம் ஈர்த்திருந்ததால் இப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை இயக்குநர் பூர்த்தி செய்துள்ளார்.

ஸ்டார் படத்தின் கதை: சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் ஊரைவிட்டு ஓடி வந்த லால், அதில் சாதிக்க முடியாமல் போகவே போட்டோகிராபர் ஆகிறார். தன்னுடைய ஆசையை எப்படியாவது மகன் மூலம் நிறைவேற்றிக்கொள்ள துடிக்கும் லால். தன் மகன் கவினை நடிகன் ஆக்குவதற்காக பெரும் முயற்சிகள் எடுக்கிறார். சிறு வயது முதலே மகனுக்கு நடிப்பில் ஆர்வம் ஊட்டுகிறார். கவினும் நடிப்பில் ஆர்வம் கொண்டு அதில் தீவிர கவனம் செலுத்துகிறார்.
குவியும் பாராட்டு: இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கும் கவினுக்கு முகத்தில் காயம் ஏற்பட, காதலியும் கவினை விட்டு பிரிகிறார். இறுதியில் கவின் நடிகராக மாறினாரா? காதலில் வெற்றி பெற்றாரா? என்பது தான் ஸ்டார் படத்தின் மீதிக்கதை. முதல் பாதியில் சாக்லேட் பாயாகவும், இரண்டாம் பாதியில் சாதிக்க துடிக்கும் இளைஞராகவும் நடித்து மனதில் பிடித்து உள்ளார் கவின். வசூலை குவித்து வரும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த காதல் சுகுமார், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
காதல் சுகுமார் பேட்டி: அதில், ஸ்டார் படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிக்கையாளர்களுக்கு இந்த படம் போட்டுக்காட்டப்பட்டது. அப்போதே பத்திரிக்கையாளர்கள் எனக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். படம் வெளியான பிறகும், நான் வரும் காட்சியை வீடியோ எடுத்தும், போட்டோ எடுத்தும் வாட்ஸ்ஆப்பில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரொம்ப நாள் கழித்து ஒரு பெரிய படத்தில் நடித்து இருக்கிறேன். இந்த படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
திறமையான இயக்குநர்: இந்த படத்தில் நடிக்க இயக்குநர் என்னை அழைத்தபோது, அவர் சொன்ன வார்த்தை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. சினிமா திறமையே இல்லாதவனை கோபுரத்தில் ஏற்றிவிடும். அதே பல திறமையோடு காத்திருப்பவர்களை காலில் போட்டு மிதிக்கும், ஆனால்,அவன் என்னைக்காவது ஒரு நாள் பெரிய ஆளாக வருவான் என்றார். இயக்குநர் இளன் சிறியவராக இருந்தாலும், உணர்வுபூர்வமாக ஒரு விஷயத்தை சொல்வதில் திறமை சாலியாக இருக்கிறார்.
என் பயோபிக்: காதல் படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், சிலரின் தலையீடால் அது முடியாமல் போனது. அந்த காலகட்டத்தில் பீக்கில் இருந்த நடிகர்கள் பலரும் இப்போது சினிமாவிலேயே இல்லை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலை செய்து வருகிறார்கள். நான் மட்டும் தான், சினிமாவை விடக்கூடாது என்று, கிடைத்த வாய்ப்பில் நடித்து வருகிறேன். ஸ்டார் இந்த படத்தை பார்த்துவிட்டு பலர் போன் செய்து அழுகிறார்கள். ஸ்டார் படம் என்னுடைய பயோபிக் போலவே இருக்கிறது என்று நடிகர் காதல் சுகுமார் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











