மத கஜ ராஜா தான் பொங்கல் வின்னர்.. காதலிக்க நேரமில்லை முதல் நாள் வசூல் இவ்வளவுதானா? நேசிப்பாயா வசூல்?
சென்னை: இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கள் வெளியாகி உள்ளன. ஜனவரி 10ம் தேதி ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படம் வெளியானது. தமிழில் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் படம் வெளியானது. தமிழ்நாட்டில் அந்த இரு படங்களின் வசூலும் சுமார் ரகம் தான்.
ஜனவரி 12ம் தேதி சுந்தர். சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் நடிப்பில் வெளியான மத கஜ ராஜா படத்தை பார்த்ததுமே ரசிகர்கள் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் படங்களை பார்ப்பதற்கு முன்னரே பொங்கல் வின்னர் மத கஜ ராஜா தான் என அடித்துக் கூறிவிட்டனர்.

இந்நிலையில், ரவி மோகன், நித்யா மேனன் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான காதலிக்க நேரமில்லை மற்றும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான நேசிப்பாயா உள்ளிட்ட படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ள நிலையில், நேற்றும் மத கஜ ராஜாவின் கைதான் ஓங்கி நிற்கிறது.
காதலிக்க நேரமில்லை வசூல்: ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்ற காரணமே மொட்டை மாடி பார்ட்டியில் விஜே சித்து அவரை அசிங்கப்படுத்தியது தான் என வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் விளாசினர். தீபாவளிக்கு ஜெயம் ரவியின் பிரதர் படத்தை நம்பி போய் பார்த்த ரசிகர்கள் காதலிக்க நேரமில்லை படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை என்றால் கூட தியேட்டர் பக்கம் ஒதுங்கவே தயங்கிய நிலையில், முதல் நாள் வசூல் வெறும் 2.35 கோடி தான் வந்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், படத்திற்கு கிடைத்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இந்த வாரம் வசூல் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

நேசிப்பாயா நிலைமை ரொம்ப மோசம்: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமான நேசிப்பாயா படத்தில் அவருக்கு ஜோடியாக ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடித்திருந்தார். ஷங்கர் படமே தமிழ்நாட்டில் வசூல் வேட்டை நடத்தாத நிலையில், அவரது மகள் படமும் முதல் நாளில் குறைவான தியேட்டர்களில் மட்டுமே வெளியாகி அங்கேயும் கூட்டமே வராமல் வெறும் 20 லட்சம் மட்டுமே வசூல் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

வணங்கான் வசூல்: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான வணங்கான் படத்தில் பார்வையற்ற பெண்கள் குளிப்பதை படமெடுத்து பார்த்து ரசிக்கும் குற்றவாளிகளை மாற்றுத்திறனாளி ஹீரோ கொலை செய்வது தான் கதை என தெரிந்த நிலையில், பொங்கலுக்கு ஏன் வன்முறையான படத்தை பார்க்க வேண்டும் என பலரும் அந்த படத்தை ஒதுக்கி விட்ட நிலையில், இதுவரை 5 நாட்களில் ஒட்டுமொத்தமாக 4.54 கோடி ரூபாய் தான் அந்த படம் வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர்.
பொங்கல் வின்னர்: இந்த ஆண்டு பொங்கல் வின்னர் என்றால் அது விஷாலின் மத கஜ ராஜா படம் தான். ஞாயிற்றுக்கிழமை வெளியான சுந்தர். சியின் படம் முதல் 2 நாட்களில் 6.50 கோடி வசூலை கடந்த நிலையில், பொங்கல் விடுமுறையான நேற்று மட்டும் 6 கோடி ரூபாய் வசூல் செய்து இதுவரை 12.50 கோடி கலெக்ஷனுடன் பொங்கல் ரேஸில் முன்னிலையில் உள்ளது. மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை வசூல் வேட்டை நடத்தினால் மத கஜ ராஜா படம் 50 கோடி வசூலை கடக்கும் என்று கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











