“ஆமாம் சீக்கிரமே கல்யாணச் சாப்பாடு போடப் போறேன்”.. வெளிப்படையாக ஒப்புக் கொண்ட பிரபல நடிகை!
விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை: விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக திரையுலகில் வெற்றி நாயகியாக வலம் வருபவர்களில் நடிகை காஜல் அகர்வாலும் ஒருவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து வருகிறார். தற்போது தமிழில் கமலின் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக காஜல் தற்காப்பு கலை எல்லாம் கற்றுள்ளார். இந்தியன் 2 படக்குழு தைவான் செல்ல உள்ளது. தைவானில் நடக்கும் படப்பிடிப்பில் காஜலும் கலந்து கொள்கிறார்
34 வயதாகும் காஜலின் தங்கைக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது. எனவே காஜலும் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்ற பேச்சு நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நடிகை காஜல் அகர்வாலே அறிவித்துள்ளார். முன்பே அவர் கூறியது போல், அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பவர் நடிகர் இல்லை, தொழிலதிபர் ஆவார்.

இந்தத் திருமணம் காதல் திருமணம் இல்லை என்றும், அவரது பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் என்றும் கூறப்படுகிறது. விரைவில் தனது வருங்காலக் கணவர் யார் என காஜல் அகர்வாலே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல், 'தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக' கூறி, தனது வருங்காலக் கணவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என ஒரு பெரிய பட்டியலே வெளியிட்டார்.
தற்போது அவருக்கு மாப்பிள்ளை உறுதியாகி விட்டது என்ற தகவல் மூலம், அந்த தொழிலதிபர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











