»   »  அமெரிக்காவில் திரையிடப்பட்ட 'கக்கூஸ்': பார்த்து நொந்த அமெரிக்கர்கள், இந்தியர்கள்

அமெரிக்காவில் திரையிடப்பட்ட 'கக்கூஸ்': பார்த்து நொந்த அமெரிக்கர்கள், இந்தியர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மில்பிடாஸ்: கடந்த 13ம் தேதி அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் உள்ள மில்பிடாஸ் நகர நூலக அரங்கத்தில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் சார்பில் "கக்கூஸ்" ஆவணப்படம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு திரையிடப்பட்டது.

சமூக ஆர்வலர் திவ்யா பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்திய சமூகத்தில் தவிர்க்கப்பட்டு மிகவும் ஒடுக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் நாள்தோறும் எதிர்கொள்ளும் அவலங்களை நம் கண்முன்னே நிறுத்தி, நம் கன்னத்தில் ஓங்கி அறையும் ஒரு ஆவணப்படம்.

Kakkoos documnetary film screened in the USA

உலகின் பண்பட்ட நாடுகள் எதிலும் இல்லாத "மனிதக் கழிவை மனிதன் கையால் அள்ளும்" கொடுமை 21ம் நூற்றாண்டிலும் கூட இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, சமூகநீதியில் ஓரளவு முன்னேறியுள்ள மாநிலமான தமிழ்நாட்டிலும் இது தொடர்கிறது என்ற கசப்பான உண்மையை கக்கூஸ் ஆவணப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மனிதக்கழிவை மனிதன் கையால் அள்ளுவதை தடுக்க சட்டங்கள் இருந்தபோதிலும், இந்திய நடுவண் அரசும், தமிழக மாநில அரசும் தங்கள் மெத்தனப்போக்கால் இந்த இழிவழக்கை ஒழிக்க எவ்வித சிறப்பு நடவடிக்கையும் எடுக்க முயலவில்லை. எனவே, பெரும்பான்மையான இந்தியர்கள் இந்த அவலத்தின் கொடுமையை உணர முடியாமல் வாழ்கின்றனர்.

அதன் பொருட்டு திரையிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை காண்பதற்கு கலிபோர்னியாவில் வாழும் இந்தியர்கள், அமெரிக்கர்கள், பிற தேசிய இனத்தை சேர்ந்தவர்கள் எனப் பல்வேறு மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை தந்து ஆதரித்தார்கள்.

அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்தின்(AKSC) உறுப்பினர் திரு. கனகராஜன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

முதலில் பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று, துப்புரவுப் பணியில் பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளர்களுக்கும், அண்மையில் உத்தர பிரதேச மாநில மருத்துவமனையில் இறந்து போன 70க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் சேர்த்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

Kakkoos documnetary film screened in the USA

அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்தின்(AKSC) மற்றொரு உறுப்பினர் திரு. இளஞ்சேரன் பார்வையாளர்களை வரவேற்று பேசியபோது, இயக்குனர் திவ்யா பாரதி இப்படத்தை எடுக்க உந்துதலாக இருந்த நிகழ்வுகளை விவரித்தார். அரசு மருத்துவமனையில் மூன்று நாளாகியும் கேட்பாரற்று கிடந்து அழுகிப்போன ஒரு துப்புரவு தொழிலாளியின் பிணத்தை எடுத்துவர திவ்யா பாரதி போராடியதும், அதைத் தொடர்ந்து எழுத்தாளர் பாஷா சிங் எழுதிய "தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்" என்ற புத்தகத்தை படித்ததும் இந்த ஆவணப்படத்தை அவர் இயக்கத் தூண்டுதலாக அமைந்தது என்பதை திரு. இளஞ்சேரன் தெரிவித்தார்.

"அசோசியேஷன் ஆப் இந்தியாஸ் டெவலெப்மென்ட்(AID)- வளைகுடாப்பகுதி" அமைப்பின் உறுப்பினர் திருமதி. கலை ராமியா பேசியபோது, இந்த ஆவணப்படம் எத்தகைய கேள்விகளை முன்வைக்கிறது என்பதை விளக்கினார். நாள்தோறும் அருவருக்கத்தக்க வேலைகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதையும், சரியான பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல் அவர்கள் படும் துயரத்தையும் இப்படம் ஆவணப்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டினார். குறிப்பாக, பெண்கள் கருப்பையை இழக்கும் கொடுமையையும், அவர்களின் குழந்தைகள் "என்னை, உன் கையால் தொடாதே அம்மா!" என்று சொல்லும்போது அப்பெண்களுக்கு உண்டாகும் உளவியல் மன அழுத்தத்தையும் இப்படத்தில் பதிவு செய்திருப்பதை போன்று இதுவரை யாரும் செய்யவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன் பின்பு, அரங்கு முழுதும் நிறைந்திருந்த பார்வையாளர்களுக்கு கக்கூஸ் ஆவணப்படம் திரையிட்பட்டது. அதில் வரும் உண்மை நிகழ்வுகளும், துப்புரவுத் தொழிலில் ஈபடுத்தப்பட்டிருக்கும் மக்களின் நேர்காணல்களும் பார்வையாளர்களை உறையவைத்தன. படம் முடிந்தபின், அதன் தாக்கத்தால் மனம் கனத்திருந்த பார்வைாயளர்கள் பலதரப்பட்ட கேள்விகளையும், கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். மனிதத்தன்மையற்ற இத்தொழிலில் ஈடுபடும் மக்களுக்கு சமூகத்தில் ஏற்படும் இழிநிலையும், அதன் பொருட்டு வேறு எந்த வேலைக்கும் அவர்கள் தகுதியற்றவர்களாகி, பல தலைமுறைகளாக இத்தொழிலை விட முடியாத இயலாமைக்கு உள்ளாவது மனித உரிமை மீறல் என்ற கருத்தையும், அதை ஒழிக்கத் தேவையான வழிமுறைகள் பற்றியும் பார்வையாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.

பின்பு தேசிய அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்தின் அமைப்பாளர் திரு. கார்த்திகேயன், மனித மலத்தை மனிதன் அள்ளும் அவலம் இந்திய சமூகத்தில் இன்றளவும் தொடர்வது சாதி அடிப்படையிலான தீண்டாமை தான் என்பதை விளக்கிப் பேசினார். இது இந்திய அரசியலமைப்பின் 15, 17வது பிரிவுகளின்படி சட்டமீறல் என்பதை விளக்கிய அவர், இந்திய நடுவண் அரசும், மாநில அரசுகளும் இது பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்றார். விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை பரிந்துரைக்கும் தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் மீதான இந்திய சட்ட கமிஷனின் அறிக்கையை சுட்டிக் காட்டும் அவர், ஒடுக்கப்பட்ட மக்கள் நலனில் உறுதிமிக்க தலித்துகளையும், ஆதிவாசிகளையும் அதிக எண்ணிக்கையில் சட்டமன்றங்களுக்கு அனுப்ப ஏதுவாகும் விகித்தாச்சார பிரிதிநிதித்துவ முறையே பொருத்தமான மாற்றாக இருக்குமென்றும் வலியுறுத்தி கூறினார்.

அசோசியேஷன் ஆப் இந்தியாஸ் டெவலெப்மென்ட்(AID)- வளைகுடாப்பகுதி அமைப்பின் தலைவி திருமதி. வித்யா பழனிசாமி பேசுகையில், துப்புரவு தொழிலாளர்களுக்கு பொருளாதார தன்னிறைவை அடையும் மாற்று வழிமுறைகளை பயிற்றுவிப்பதும், அவர்களின் அடுத்த தலைமுறைகளுக்கு சாதியப்பாகுபாடு இல்லாத கல்வியை வழங்குவதுமான இரண்டு அடுக்கு அணுகுமுறையை முன்மொழிந்தார்.

Kakkoos documnetary film screened in the USA

தந்தை பெரியாரின் வழிமுறைகளை பயன்படுத்தி இந்திய சாதி முறைகளை ஒழிப்பதே இந்த மக்களுக்கு முழுமையான விடுதலையாக இருக்கும் என்று உலகத் தமிழ் அமைப்பின்(WTO) மூத்த உறுப்பினர் திரு. தில்லை. க. குமரன் கூறினார். மேலும் அமெரிக்காவின் மற்ற பகுதிகளில் கக்கூஸ் ஆவணப்படத்தை திரையிடுவதற்கு உலகத் தமிழ் அமைப்பு உதவும் என்றும் உறுதியளித்தார்.

சிறகு.காம்(Siragu.com) வலைதளத்தின் செயலாளர் திரு. தியாகராஜன் பேசியபோது, இந்த அநீதிக்கு முடிவு கட்டுவதற்கு சமூகத்தின் அனைத்துவித மக்களும் முன்வர வேண்டும் என்பதை வலியறுத்திப் பேசினார்.

நாம் தமிழர் அமெரிக்காவின்(NTAI) நிறுவனரான திரு. ரவிக்குமார் பேசியபோது துப்பரவுத் தொழிலாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான தனது மேன்மையான கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

நிறைவாக நன்றியுரை வழங்கிய திரு. உதயபாஸ்கர், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகளை கக்கூஸ் ஆவணப்படம் வழியே உலகுக்கு வெளிப்படுத்திய இயக்குனர் திவ்யா பாரதிக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த படக்குழுவினருக்கும் முதற்கண் நன்றியை தெரிவித்தார். மேலும், இந்த திரையிடலுக்கு வருகைதந்து ஆதரவளித்த அனைத்து பொதுமக்களுக்கும், உதவி புரிந்த தன்னார்வலர்களுக்கும், மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கீழ்க்கண்ட தன்னார்வ நிறுவனங்களான,

அம்பேத்கர் கிங் படிப்பு வட்டம்(AKSC)

சான் ஒசே பீஸ் அன்ட் ஜஸ்டிஸ் சென்டர்(SJPJC)

அசோசியேஷன் ஆப் இந்தியாஸ் டெவலெப்மென்ட்(AID)- வளைகுடாப்பகுதி

அம்பேத்கர் அசோசியேஷன் ஆப் நார்த் அமெரிக்கா(AANA)

உலக தமிழ் அமைப்பு(WTO)

சிறகு.காம்(Siragu.com)

நாம் தமிழர் அமெரிக்கா(NTAI)

ஆகியவற்றிற்கும் பாராட்டுடன் கூடிய தனது உள்ளார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார். அமெரிக்கவாழ் இந்திய மக்கள் சமூக நீதிக்காக இதுபோன்று தொடர்ந்து தங்களின் பேராதரவை வழங்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் தகவலுக்கு akscsfba@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

English summary
Divya Bharathi's documentary film Kakkoos has been screened in California, USA on august 13th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil