தூக்க மாத்திரைகள் தின்று.. நடிகர் கலாபவன் மணி தம்பி திடீர் தற்கொலை முயற்சி.. மருத்துவமனையில் அனுமதி
கொச்சி: மறைந்த பிரபல நடிகர் கலாபவன் மணியின் தம்பி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி. மிமிக்ரி கலைஞரான இவர், முதலில் மலையாளப் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார்.
பின்னர் வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

பண்ணை வீட்டில்
தமிழ், தெலுங்கு படங்களிலும் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். தமிழில் விக்ரமின் ஜெமினி, விஜய்யின் புதிய கீதை, குத்து, அந்நியன், ஆறு உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடனான மதுவிருந்தில் கலந்துகொண்டார்.

மருத்துவமனை
அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து எர்ணாகுளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உடலில் விஷம் கலந்திருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக மனைவி மற்றும் உறவினர்கள் புகார் கூறினர். இதுபற்றிய விசாரணை நடந்துவந்தது.

நடனக் கலைஞர்
பின்னர் மதுபழக்கம் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக சிபிஐ அறிவித்தது. இந்நிலையில் மறைந்த கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன். இவர் நடனக் கலைஞர். குறிப்பாக இவர் மோகினியாட்டம் ஆடுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சூரில் உள்ள சங்கீத நாடக அகாடமியில் ஆன்லைன் மூலம், மோகினியாட்டம் நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டிருந்தார்.

சங்கீத நாடக அகாடமி
அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்து அவர் சங்கீத நாடக அகாடமி முன் போராட்டம் நடத்தினார். இந்நிலையில், ராமகிருஷ்ணன் நேற்று இரவு தனது வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். இதைக் கண்ட உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு சாலக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தூக்க மாத்திரைகள்
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











