ஒரு கோடி ரூபாயில் ரஜினி வீடு வாங்கித் தந்த விவகாரம்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கலைஞானம்!
Recommended Video
சென்னை: ரஜினி வாங்கிக்கொடுத்த வீடு தொடர்பாக பரவி வரும் வதந்திகளுக்கு தயாரிப்பாளர் கலைஞானம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தை முதல் முதலாக ஹீரோவாக வைத்து படம் தயாரித்தவர் எழுத்தாளர் கலைஞானம். அவர் தான் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை தந்தவர். ஒரு காலத்தில் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த கலைஞானம், படங்களின் தோல்வியால் நஷ்டமடைந்தார். இதனால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா எடுத்தார் இயக்குனர் பாரதிராஜா. அந்த விழாவில் பேசிய ரஜினி, கலைஞானத்திற்கு தனது சொந்த செலவில் வீடு வாங்கி தரத் தயார் என மேடையிலேயே அறிவித்தார். கலைஞானம் தனக்கு பிடித்த மாதிரி வீட்டை தேர்வு செய்த பின்னர், அதற்கான பணத்தை தான் கொடுத்து விடுவதாக ரஜினி கூறினார்.
சொன்னதை போலவே விருகம்பாக்கத்தில் 1,320 சதுர அடியில் 3 படுக்கையறைகளுடன் கூடிய வீட்டை கலைஞானத்திற்கு பரிசாக அளித்தார் ரஜினி. கடந்த வாரம் அந்த வீட்டிற்கு நேரடியாக சென்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் அவர்.
இந்நிலையில் கலைஞானத்திற்கு ரஜினி வாங்கிக்கொடுத்த வீட்டின் பத்திரம் லதா ரஜினிகாந்த் பெயரில் இருப்பதாக ஒரு செய்தி பரவியது. அதனைத் தொடர்ந்து இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கலைஞானம், 'வீடு தனது பெயரில் தான் பதியப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் இதுகுறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











