சார்பட்டா பரம்பரை படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி சேனல்.. விநாயகர் சதுர்த்திக்கு ஒளிபரப்பா?
சென்னை: ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பா. ரஞ்சித்.
8 மாத குழந்தை கிளாடி சாராவின் இதயநோய் சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்
இவரது இயக்கத்தில் அமேஸான் பிரைம்மில் ஓடிடி தளத்தில் கடந்த மாதம் வெளியான படம் சார்பட்டா பரம்பரை.

சார்பட்டா பரம்பரை நடிகர்கள்
இந்தப் படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், ஜான் கோக்கென், ஷபீர் கல்லரக்கல், அனுபமா குமார், ஜிஎம் சுந்தர், சந்தோஷ் பிரதாப், வேட்டை முத்துக்குமார், காளி வெங்கட், கிஷோர், சரவணவேல் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

குத்துச் சண்டையை மைய்யப்படுத்தி
1970களில் வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சார்பட்டா பரம்பரை படத்தில் சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரைக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டியை காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

அவசர நிலை பிரகடனம் - திமுக
படத்தில் அந்தக்காலக் கட்டத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் அப்படியே காட்டப்பட்டிருந்தது. 1975ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனத்தின் போது தி.மு.கவுக்கு நேர்ந்த நிகழ்வுகள் குறித்தும் காட்டப்பட்டிருந்தது. இதனால் இப்படம் திமுக தொண்டர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கட்சி பெயர்கள், கட்சி தலைவர்களின் பெயர்கள் என எதுவும் மாற்றப்படாமல் அப்படியே காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.

அதிமுக கண்டனம் - குற்றச்சாட்டு
திமுக தொண்டர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்த நிலையில் அதிமுகவினர் இப்படத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புறம்பான காட்சிகளைக் கொண்டு மக்களிடம் பொய்ச் செய்தியை பா.ரஞ்சித் பரப்பியதாகவும், அந்தக் காட்சிகள் அனைத்தும் பொய்யானவை என மக்களிடம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அதிமுக சார்பில் இயக்குநர் பா ரஞ்சித்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கேரக்டராகவே வாழ்ந்த நட்சத்திரங்கள்
சார்பட்டா பரம்பரை படத்தில் அனல் பறக்கும் பல வசனங்களும் படத்தில் இடம்பெற்றன. ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், ஷபீர் கல்லறக்கல், அனுபமா குமார், ஜான் விஜய் என பலரும் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்திருந்தனர். யாரையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு படத்தில் நடித்திருந்தனர்.

டப்ஸ்மேஷ் செய்யப்பட்ட காட்சிகள்
இதனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பேசப்பட்டது. குறிப்பாக ஆர்யா, டான்ஸிங் ரோஸ், ஜான் விஜய் ஆகியோர் நடித்திருந்த காட்சிகளை வைத்து இளைஞர்கள் பலர் டப்ஸ் மேஷ் செய்திருந்தனர் அந்த அளவுக்கு சார்பட்டா பரம்பரை படம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதேபோல் ரங்கன் வாத்தியாரை வைத்து ஏராளமான மீம்ஸ்களும் வெளியிடப்பட்டு வருகிறது.

தியேட்டரில் ரிலீஸ் செய்ய கோரிக்கை
படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதம் கடந்த போதும் சார்பட்டா பரம்பரை படம் குறித்து நாள் தோறும் ஒரு சுவாரசிய தகவல் வெளியான வண்ணம் உள்ளது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் ஓடிடியில் வெளியான படங்களை தியேட்டரில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அந்த வகையில் சார்பாட்ட பரம்பரை படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.

சார்பட்டா பரம்பரையை கைப்பற்றிய கலைஞர் டிவி
சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடி பிரிமியர் செய்யப்பட்டதால் திரையரங்கில் வெளியிட அனுமதிக்க முடியாது என்று அந்நிறுவனம் கூறியதாக தெரிகிறது. இதனால் இப்படம் திரையரங்கிற்கு வருவது சந்தேகம் என தெரிகிறது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் தொலைக்காட்சி உரிமம் குறித்த எந்த தகவலும் வெளிவராத நிலையில், கலைஞர் தொலைக்காட்சி படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு ஒளிபரப்பு?
இதனையடுத்து, தொலைக்காட்சியில் வெளியிடுவது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வரும் விநாயகர் சதுர்த்திக்கு இப்படம் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











