Theri Re- Release: காய்ந்து கிடக்கும் விஜய் ரசிகர்கள்.. காய் நகர்த்திய தாணு.. இது தளபதி பொங்கல் தான்
சென்னை: ஜன நாயகன் படத்துடன் தளபதி விஜய் சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்தார். கடந்த ஆண்டே வெளியாக திட்டமிடப்பட்ட ஜன நாயகன் படம் இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸ்க்கு தள்ளிவைக்கப்பட்டது. மலேசியாவில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இப்படி இருக்கையில் 9ஆம் தேதி படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் சென்சார் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. இந்த பொங்கலை தளபதி பொங்கலாக கொண்டாடலாம் என்று நினைத்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தின் உச்சத்தில் உள்ளார்கள்.
இன்னும் சொல்லப்போனால் காய்ந்து போய் கிடக்கிறார்கள். விஜயைப் பார்த்து வளர்ந்த சிவகார்த்திகேயன் எல்லாம் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்கிறார். ஆனால் விஜயால் அது முடியவில்லையே என்ற ஏக்கமும் காழ்ப்புணர்வும் விஜய் ரசிகர்கள் பலருக்கும் இருந்தது. இதனால் சிவகார்த்திகேயனை அவரது குடும்பத்தை. ரசிகர்களை மோசமாக விமர்சித்த விஜய் ரசிகர்களையும் பார்க்க முடிந்தது. அது மட்டும் இல்லாமல், படக்குழுவையும் மோசமாக விமர்சித்தார்கள்.

தளபதி ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசு: இப்படி இருக்கையில் படம் இந்த மாதம் 21ஆம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்புகளே இல்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது. 21ஆம் தேதி மேல்முறையீட்டு மனுவானது விசாரிக்கப்பட்டு, அதன் தீர்ப்பு வந்த பின்னர்தான் படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும். இப்படி இருக்கையில் பொங்கலை தளபதி படம் பார்த்து கொண்டாடலாம் என்று ஆசையாக இருந்த ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான விஜயின் தெறி படத்தை வரும் 15ஆம் தேதியில் இருந்து ரீ ரிலீஸ் செய்யப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.

தெறி ரீ ரிலீஸ்: தெறி படம் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வெளியான இரண்டாவது படம். மேலும் அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் உருவான முதல் படம். படத்தில் சமந்தா, இயக்குநர் மகேந்திரன், எமி ஜாக்சன், ராதிகா, பிரபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். விஜயின் பிரமாண்டமான வெற்றிப் படங்களில் இந்த படமும் ஒன்று என்பதால் பொங்கல் ரீ ரிலீஸ் ஆக தெறி படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











