Vaadivaasal - வாடிவாசல் தமிழர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் - கலைப்புலி தாணு பெருமிதம்
சென்னை: Vaadivaasal (வாடிவாசல்) வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் உலகத் தமிழர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்திருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானது. சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதன் இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்கான ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டாலும் இன்னும் சில காட்சிகளை படமாக்கவிருக்கிறார் என்றும், படத்தை மெருகேற்றும் வேலையில் அவர் இறங்கியிருப்பதாகவும் தெரிகிறது.
வாடிவாசல்: நாவல்களையும், சிறுகதைகளையும் படமாக்கும் முயற்சியில் வெற்றிமாறன் இப்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார். அப்படி அவர் இயக்கிய விசாரணை, அசுரன் ஆகிய படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்தன. அதேபோல் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை அதே பெயரிலேயே வெற்றிமாறன் படமாக்கவிருக்கிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

வாடிவாசல் டெஸ்ட் ஷூட்: வாடிவாசல் படம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர். ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விடுதலை படத்தை இயக்க வந்துவிட்டார் வெற்றிமாறன். இதற்கிடையே தமிழ்நாடு முழுவதுமிருந்து காளைகளை வரவழைத்து டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது. அதில் நடிகர் சூர்யா,டாணாக்காரன் இயக்குநரும், நடிகருமான தமிழ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அந்த டெஸ்ட் ஷூட் வீடியோவே ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.
மனம் திறந்த தயாரிப்பாளர் தாணு: இந்நிலையில் வாடிவாசல் படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் தாணு, "முதலில் சூர்யா - கௌதம் மேனன் இணையும் படத்தை தயாரிப்பதாகத்தான் இருந்தது. அதன் பிறகுதான் வெற்றிமாறன் - சூர்யா கூட்டணி உருவானது.
விடுதலை திரைப்படம் முடிந்த பின்னர்தான் வாடிவாசல் படத்தை எடுக்க வேண்டும் என்று வெற்றிமாறன் தீர்மானித்துவிட்டார். அதன் பேரிலேயே பேச்சு வார்த்தை நடந்து முடிந்தது. ஆனால் திடீரென்று வந்த கொரோனா அந்த படத்திற்கு இன்னும் அதிகமான இடைவெளியை உண்டாக்கிவிட்டது.

ஏன் தாமதம்: அது மட்டுமில்லாமல் அதில் நாங்கள் கமிட் செய்த நடிகர்கள் அனைவரும் மூன்று நான்கு மொழிகளில் நடிப்பவர்கள். அவர்கள் கொடுத்த கால்ஷீட்கள் முடிந்த நிலையில், மேற்கொண்டு கால்ஷீட்கள் தேவைப்படும்போது அவர்கள் அந்த படங்களை முடித்துவிட்டு வர வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிவிட்டார்கள். அதனால்தான் வாடிவாசல் திரைப்படம் கால தாமதம் ஆகிறது.
தமிழர்கள் கொண்டாடும் படம்: ஆகையால் இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. காலம்தான் தாமதத்திற்கு காரணம். ஆனால் அந்த திரைப்படத்திற்கான காளைகளை பராமரிப்பது உள்ளிட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. லண்டனில் கிராஃபிக்ஸ் சம்பந்தமான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
வெற்றிமாறன் அந்தத் திரைப்படத்தை அணுகிய விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. வெற்றிமாறன் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் வாடிவாசல் திரைப்படம் உலகத் தமிழர்கள் கொண்டாடும் திரைப்படமாக வரும்" என பெருமிதத்துடன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











