மங்காத்தா ரீ ரிலீஸை ஏன் தள்ளி வைக்க சொல்லவில்லை.. திரௌபதி 2 இயக்குநர் மோகன் ஜி ஓபன் டாக்
சென்னை: திரௌபதி, பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜி இப்போது திரௌபதி 2 படத்தை இயக்கியிருக்கிறார். அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படம் என்று தெரியாமல் பாடல் பாடிவிட்டேன் என சின்மயி சொன்னது; கலாசாரம் பற்றி பாடம் எடுக்கும் இயக்குநர் இந்தப் படத்தில் பெண்களை கவர்ச்சியாக ஆடவிட்டது என இப்போதே கவனத்தை ஈர்த்திருக்கிறது படம்.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான மோகன் ஜி; திரௌபதி படத்தை இயக்கி பிரபலமானார். அந்தப் படத்தில் அவர் வைத்த பல காட்சிகள் பலத்த சர்ச்சையை சந்தித்தன. அந்தப் படத்துக்கு பிறகு பகாசூரன் படத்தை இயக்கினார். அவர் இயக்கும் படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறாது. ஆனால் சர்ச்சைகளால் அதீத கவனத்தை பெற்றுவிடும். அப்படி எழும் சர்ச்சைகளுக்கு இயக்குநரும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே இருப்பார்.
திரௌபதி 2: இப்போது அவர் திரௌபதி 2 படத்தை இயக்கியிருக்கிறார். இதிலும் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட்தான் ஹீரோவாக நடித்திருக்கிறார். முதல் பாகம் போன்றே இரண்டாவது பாகமும் பெரிய சர்ச்சைகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முதல் விதையை சின்மயி சில மாதங்களுக்கு முன்பு போட்டார். அதாவது இந்தப் படத்துக்குத்தான் பாடுகிறோம் என தெரியாமல் பாடல் பாடிவிட்டேன். எனது கொள்கைகளுக்கு முரணான படத்தில் பாடல் பாடியதற்கு வருந்துகிறேன் என கூறியிருந்தார். இது மோகன் ஜிக்கு பெரிய சங்கடமாகிவிட்டது.

எதிர்த்த மோகன்: உடனே கொந்தளித்த மோகன், சின்மயிக்கு யார் அழுத்தம் கொடுத்தது?. அவர் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். இரண்டு நாட்களுக்குள் பதிவை நீக்க வேண்டும். எதற்காக மன்னிப்பு கேட்டேன் என்றும் அவர் காரணத்தை சொல்ல வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். பிறகு சின்மயி இதற்கு எதிர்வினை ஆற்றாததை தொடர்ந்து இவ்விவகாரம் முடிவடைந்தது. இதனையடுத்து படத்திலிருந்து தராசுகி ராம் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வந்தது.
பாடம் எடுப்பவர் படத்தில் இப்படியா?: அந்த பாடலிலோ இரண்டு பெண்கள் கவர்ச்சி ஆட்டம் போட; தனது படங்களில், பேட்டிகளில் எல்லாம் பெண்களின் உடைகள், கலாசாரம், பண்பாடு என பாடம் எடுக்கும் மோகன் ஜி; தன்னுடைய படத்திலேயே பெண்களை கவர்ச்சி நடனம் ஆட வைத்தது ஏன் என கேள்வி எழுப்பினார்கள். இது ஒருபக்கம் இருக்க இவர்கள் குறித்திருந்த ரிலீஸ் தேதியான 23ஆம் தேதி தெறி படமும், மங்காத்தா படமும் ரீ ரிலீஸாகின்றன. இதனால் தனது படம் அடி வாங்கும் என எண்ணிய மோகன், ரீ ரிலீஸை தள்ளி வைக்க தெறி தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கோரிக்கை வைத்தார்.
மோகனின் விளக்கம்: தாணுவும் கோரிக்கையை ஏற்று தள்ளி வைத்தார். இந்நிலையில் மோகன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், மங்காத்தா ரீ ரிலீஸை தள்ளி வைக்க ஏன் கோரிக்கை வைக்கவில்லை என கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இந்தக் கேள்வியை என்னிடம் நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். 23ஆம் தேதி ரிலீஸ் என்று சன் பிக்சர்ஸ் முன்னரே சொல்லிவிட்டார்கள். நாங்கள்தான் வேறு தேதிகள் சொல்லி பிறகு 23ஆம் தேதிக்கு வந்தோம். நாங்கள் அறிவித்தபோது தெறி அறிவிப்பும் வந்தது. கலைப்புலி தாணுவை எளிதாக அணுகலாம். அதனால்தான் அவரை அணுகி பேசினோம். அவரும் எங்களை புரிந்துகொண்டு தள்ளி வைத்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











