பில் கட்டாமல் எஸ்கேப் ஆக நினைத்த வாரிசு நடிகர்.. சிறைபிடித்த ஹோட்டல் ஊழியர்கள்.. மூணாறு சம்பவம்!
சென்னை: மூணாறில் படப்பிடிப்பு நடத்தி வரும் பிரபல வாரிசு நடிகரின் மகன் ஹோட்டலில் பில் கட்டாமல் வெளியேற நினைத்த நிலையில் ஓட்டல் ஊழியர்கள் அவரை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் கலக்கி வரும் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் தான் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளார்.
ஒரு பக்க கதை, சுதா கொங்கராவின் தங்கம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஜெயராமின் மகன்
2000ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கொச்சு கொச்சு சந்தோஷங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் காளிதாஸ் ஜெயராம். பிரபல நடிகர் ஜெயராமின் மகனான இவர் தமிழில் ஹீரோவாக மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஒடிடி நாயகன்
அமேசான் பிரைமில் வெளியான புத்தம் புது காலை மற்றும் நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் உள்ளிட்ட ஒடிடி படைப்புகளில் நடித்திருந்தார். மேலும், சில வெப் தொடர்களிலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அப்படியொரு வெப் தொடரின் ஷூட்டிங் தான் தற்போது மூணாறில் நடைபெற்று வருகிறதாம்.

ஒரு பக்க கதை
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியான ஒரு பக்க கதை திரைப்படத்தில் ஹீரோவாக காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்திருந்தார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் காளிதாஸ் ஜெயராம் தற்போது இப்படியொரு சிக்கலில் சிக்கியது பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஹோட்டலில் சிறை
கேரளாவின் மூணாறில் படப்பிடிப்புக்காக சென்ற இடத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது படக்குழுவினருடன் தங்கி உள்ளார். ஹோட்டலுக்கு வாடகை மற்றும் அங்கே செலவு பண்ண தொகையை கட்டாமல் வெளியேற முயற்சித்த நிலையில் ஹோட்டல் ஊழியர்கள் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட படக்குழுவினரை சிறைபிடித்து போலீஸுக்கு புகார் அளித்துள்ளனர்.

பில் கட்டல
சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் ஹோட்டலில் செலவு செய்து விட்டு அதன் பில்லை கட்டாமல் வெளியேறியதால் இப்படியொரு சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து விசாரணை நடத்தியதில் தயாரிப்பு நிறுவனம் ஹோட்டல் பில்லை செலுத்தவில்லை என விளக்கம் அளித்தனர். பின்னர், ஹோட்டல் பில்லை கட்டிவிட்டு அங்கிருந்து காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட படக்குழுவினர் வெளியேறி உள்ளனர்.

கமலின் விக்ரம்
கிருத்திகா உதயநிதியின் படத்திலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்திலும் காளிதாஸ் ஜெயராம் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கமலின் நெருங்கிய நண்பர் ஜெயராம் என்பதால் தொடர்ந்து அவரது படங்களில் நடிக்க காளிதாஸ் ஜெயராமுக்கு வாய்ப்புகள் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











