புரோமோஷனுக்காக பணத்தை வாரி இறைக்கும் கல்கி 2898 ஏடி டீம்.. இப்ப என்ன செஞ்சு இருக்காங்க பாருங்க!
சென்னை: இந்திய சினிமாவே தற்போது மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கும் சினிமா பார்க்கப்படுவது கல்கி 2898 ஏ.டி தான். படத்தின் அறிவிப்பில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அண்மையில் வெளியான படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் இருந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க கமல் ஹாசன் வில்லனாக நடித்துள்ள இந்த படம் ஒரு பான் இந்தியா படமாகவே உருவாகியுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 ஏ.டி படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் உள்ள மிகப்பெரிய ஸ்டார்கள் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், நடிகர்களுக்கான சம்பளத்திற்கே அதிகப்படியான பணத்தை தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது. கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸூடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், உலக நாயகன் கமல் ஹாசன், அதிரடிக்கு பெயர்போன நடிகை தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

எப்படிப்பட்ட படம்: ட்ரைலரைப் பார்க்கும்போது கடவுள் சக்திக்கும் அறிவியல் சக்திக்கும் இடையில் ஏற்படும் போரைப் போல் இருக்கின்றது. ட்ரைலரின் இறுதியில் வரும் கமல் ஹாசன் பேசும் வசனமும் அவருக்கான மேக்கப்பும் ஆச்சரியப்படவைக்கின்றது. குறிப்பாக அவர் பேசும் வசனமான, " பயப்படாதே, இன்னொரு பிரபஞ்சம் வந்து கொண்டு இருக்கின்றது என்ற வசனமும் அதற்கு வைக்கப்பட்டுள்ளா க்ளோசப் ஷாட்டும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைக்கின்றது. குறிப்பாக ட்ரைலரில் வரும் வசனங்கள், பூமியில் தண்ணீர் தீர்ந்த பின்னர் பூமியை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் பூமிக்கு வந்து பார்க்கும்போது அங்கிருப்பவர்களுடன் பேசிக்கொள்வதைப் போலும் அவர்களுடன் மோதிக்கொள்வதைப் போலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் லேயர் லேயராக இரண்டு மூன்று கதைகள் பின்னிப் பிணைந்து இருப்பதை உணர முடிகின்றது. ஆனால் உண்மையில் கதைக்களம் எப்படிபட்டது என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.
வில்லன் கமல்: கல்கி 2898 ஏ.டி திரைப்படத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தில் கமல் ஹாசன் 19 நிமிடங்களும் இரண்டாம் பாகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமும் வருகின்றார்.
விளம்பர யுக்தி: இந்நிலையில் படம் வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படம் வெளியாகவுள்ள தகவலை படத்தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் மக்கள் மத்தியில் எடுத்துக் கூற, நவீன எல்.இ.டி திரைகள் பொருத்தப்பட்ட 13 மினி லாரிகளை ஏற்பாடு செய்துள்ளது. இதனை நாடு முழுவதும் பயணப்படச் செய்து மக்கள் மத்தியில் ஒளிபரப்பாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் புரோமோஷனுக்காக பணத்தை வாரி இறைத்து வருகின்றது. படம் எந்த அளவுக்கு வசூல் குவிக்கும் என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Click it and Unblock the Notifications











