தாய்மையைப் பற்றி உருக்கமாக பேசிய தீபிகா படுகோன்! புரியாமல் கிண்டலடித்தாரா நடிகர் ராணா? என்ன நடந்தது?
மும்பை: இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படமாக கல்கி 2898 ஏ.டி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் இன்னும் ஒரு வாரத்தில் அதாவது ஜூன் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படக்குழு படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. கடந்த 10ஆம் தேதி வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
படத்தினை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல எல்.ஈ.டி திரைகள் கொண்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். படத்தில் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்ட பல இந்திய திரைப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தினை வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ளது. மேலும் படத்தினை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான பைரவா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வில்லன் கமல்: படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கின்றார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. ட்ரைலரிலும் கமல்ஹாசன் ஒரு டயலாக் பேசும் விதமாக காட்டப்பட்டிருந்தது. நெற்றிக்கண்ணோடு உலகநாயகன் கமல்ஹாசன் இருப்பது, அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ரீ ரிலீஸ்: இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நேற்று அதாவது ஜூன் 19ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. அதில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பாகுபலி படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி தொகுத்து வழங்கினார்.

தீபிகா படுகோன்: அப்போது நடிகை தீபிகா படுகோனிடம் படத்தில் நடித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் படத்தில் கர்ப்பமாக இருப்பதைப் போல் நடித்தேன். தற்போது நான் நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கின்றேன். இது உண்மையிலேயே சவாலான விஷயம்தான் என கொஞ்சம் உருக்கமாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது குறுக்கிட்ட ராணா டகுபதி, தீபிகா படுகோன் இன்னும் கதாபாத்திரத்திலேயே இருக்கின்றார் எனக் கூறினார். இதைக்கேட்டதும் தீபிகா படுகோன் உட்பட அனைவரும் சிரித்தனர்.

தொடர்ந்து பேசிய தீபிகா, மொத்தம் மூன்று வருடங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம் என ஆசைப்படுகின்றேன். மேலும், படத்தில் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். படத்தில் நடிக்க நடிக்கத்தான் படம் என்ன சொல்லவருகின்றது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது" என பேசினார்.

கர்ப்பமாக உள்ள தீபிகா படுகோன்: கடந்த 2018ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் திருமணம் செய்து கொண்டனர். மேலும் சமீபத்தில் இவர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். வரும் செப்டம்பர் மாதம் தீபிகாவுக்கு குழந்தை பிறக்கவுள்ளது. சமீபத்தில் தனது கர்ப்பம் குறித்து பேசிய தீபிகா, பிரசவத்தை நினைத்து நான் மிகவும் பயத்துடனே இருக்கின்றேன். வீட்டில் அம்மா சமைத்ததை சாப்பிட்டுகொண்டு இருக்கின்றேன் எனக் கூறியிருந்தார்.



Click it and Unblock the Notifications











