ஏமாற்றத்தில் உலகநாயகன் ரசிகர்கள்; கல்கி 2898 ஏ.டி படத்தில் இவ்வளவு நேரம்தான் வராரா?
சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 ஏ.டி படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் உள்ள மிகப்பெரிய ஸ்டார்கள் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், நடிகர்களுக்கான சம்பளத்திற்கே அதிகப்படியான பொருட்செலவை தயாரிப்பு நிறுவனம் செய்துள்ளது. கல்கி 2898 ஏ.டி படத்தில் பிரபாஸூடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், உலக நாயகன் கமல் ஹாசன், அதிரடிக்கு பெயர்போன நடிகை தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகின்றார்.
ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் மட்டும் இல்லாமல், படக்குழு தரப்பில் இருந்து இன்னும் ரிவீல் செய்யாத நட்சத்திரங்களும் படத்தில் உள்ளார்களாம். குறிப்பாக விஜய் தேவரகொண்டா மற்றும் துல்கர் சல்மான் நடித்துள்ளதாகவும், அதனை படக்குழு சர்ப்ரைஸாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் படத்தில் வரும் புஜ்ஜி என்ற காருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ்தான் குரல் கொடுத்துள்ளார் எனவும் பேசப்படுகின்றது.

கமலுக்கான ஸ்கிரீன் ஷேரிங்?
வரும் 27ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் படக்குழுவினர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஏற்கனவே படத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் மாஸான வில்லனாக நடித்துள்ளார் என்பதால், ஆளவந்தான், தசாவதாரம் படத்திற்குப் பின்னர் கமல் ஹாசன் வில்லனாக நடித்துள்ளதால், அவரது ரசிகர்கள் கமல் ஹாசனை வில்லனாகப் பார்க்க பெரும் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில், மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் கல்கி 2898 ஏ.டி படத்தில் கமல் ஹாசன் எவ்வளவு நேரம் வருகின்றார் என்ற தகவல் கசிந்துள்ளது. அதன் அடிப்படையில், கல்கி 2898 ஏ.டி படத்தின் முதல் பாகத்தில் உலக நாயகன் கமல் ஹாசனின் கொடூரமான வில்லத்தனமான காட்சிகள் மொத்தம் 19 நிமிடங்கள் இடம் பெற்றுள்ளது என்றும், இரண்டாம் பாகத்தில் கமல் ஹாசனின் காட்சிகள் மட்டும் சுமார் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் இடம் பெறும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். முதல் பாகத்தில் குறைந்த நேரம் மட்டுமே கமல் வருவார் என்ற தகவல் அவரது ரசிகரகளை கொஞ்சம் கவலையடையச் செய்துள்ளது.

உலக நாயகனின் மாஸ்டர் ப்ளான்
வரும் 27ஆம் தேதி கல்கி 2898 ஏ.டி படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அதேபோல் அடுத்த மாதம் அதாவது ஜூலை மாதம் 12ஆம் தேதி இந்தியன் 2 படமும் வெளியாகவுள்ளதால், கமல் ஹாசன் ரசிகர்கள் உச்சகட்ட குஷியில் உள்ளனர். குறிப்பாக இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியினரைக் கொண்டு, ரசிகர்களைக் கடந்து பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் ப்ளான் போட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. அதேபோல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியன் படத்தின் மூன்றாவது பாகமும் வெளியாகவுள்ளதால் இந்தியன் படத்தின் பாகங்கள் மூலம் திரையில் தனக்கான பிரச்சாரத்தையும் கமல் செய்ய ஏதுவாக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதேபோல் கமல் ஹாசன் நடிப்பில் தக் லைஃப் படமும் வேகமாக படமாக்கப்பட்டு வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் இன்னும் சில மாதங்களில் பிக் பாஸ் தொடர் தொடங்கப்படவுள்ளதால் இந்த ஆண்டு கமல் ஹாசன் காட்டில் பண மழை என இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











