கல்கி 2898 AD இரண்டாம் பாகம்: படப்பிடிப்புத் தளத்தில் கமல்ஹாசன் - இணையத்தில் கசிந்த புகைப்படம்?
சென்னை: இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு பிரம்மாண்ட படைப்பாக உருவாகி, உலகளவில் மாபெரும் வெற்றி பெற்ற 'கல்கி 2898 AD' படத்தின் அடுத்த பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் என இந்திய சினிமாவின் இரண்டு துருவங்கள் இணைந்து நடித்தது ரசிகர்களுக்குப் பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது. இப்படத்தில் 'பைரவா' என்ற கதாபாத்திரத்தில் பிரபாஸ் தனது அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக, 80 வயதான அமிதாப் பச்சன் 'அஸ்வத்தாமாவாக' காட்டிய அந்த ஆக்ரோஷமான நடிப்பு, இளம் நடிகர்களுக்கே சவால் விடும் வகையில் இருந்தது என்று படம் வெளியான காலகட்டத்தில் விமர்சகர்கள் பலரும் பாராட்டினர். இந்தப் படத்தில் அமிதாப் பச்சனுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையேயான அந்த திரைப் பகிர்வு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

மகாபாரதக் கதையையும் எதிர்கால அறிவியல் உலகத்தையும் (Sci-Fi) இணைத்து இயக்குநர் நாக் அஸ்வின் காட்டிய அந்த கற்பனை உலகம் வியக்க வைத்தது என்று பலரும் பாராட்டினர். படத்தில் திஷா பதானி மற்றும் தீபிகா படுகோன் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. சந்தோஷ் நாராயணின் இசை படத்துக்குப் பெரும் பலமாக அமைந்தது. குறிப்பாக, படத்தில் வரும் அந்த 'புஜ்ஜி' கார் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதற்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருந்தார்.
தரமான அப்டேட்: இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூபாய் 1000 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசனின் 'யாஸ்கின்' கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த அமிதாப் பச்சன், இப்படத்தில் இவ்வளவு கடினமான ஆக்ரோஷ காட்சிகளில் நடித்திருப்பது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இந்தப் படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் தற்போது ஆவலுடன் காத்திருந்த நிலையில், அவர்களின் காத்திருப்புக்கு சரியான அப்டேட் வந்துள்ளது.
லீக்கான புகைப்படம்?: அதாவது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பில் உலகநாயகன் இணைந்துள்ளார். இந்த பாகத்தில் கமல்ஹாசனின் போர்ஷன் முதல் பாகத்தை விட மிகவும் கூடுதலாக இருக்கும் என்று ஏற்கனவே வெளியான தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கமல்ஹாசன் இணைந்துள்ள தகவலும் கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும் கமல்ஹாசனும் இயக்குநர் நாக் அஸ்வினும் படப்பிடிப்புத் தளத்தில் பேசிக் கொண்டு இருப்பதைப் போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இது சமீபத்திய புகைப்படம் என்று சிலரும், முதல் பாகம் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சிலரும் கமெண்ட் போட்டு வருவதால் ரசிகர்கள் கொஞ்சம் குழப்பத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications