சம்பவம் இருக்கு! ஆக்ஷனில் தீபிகா நின்னு விளையாடப் போறாங்க; கல்கி 2898 ஏ.டி புது போஸ்டர் ரிலீஸ்!
சென்னை: பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் அமைத்துக் கொண்டவர் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த சலார் திரைப்படம் ஓவர் பில்டப் என விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்ட பின்னரும் கூட, இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆவல் உள்ளது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் “கல்கி 2898 ஏ.டி”. இப்படம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற மற்றொரு காரணம் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கின்றார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 ஏ.டி படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் உள்ள மிகப்பெரிய ஸ்டார்கள் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், நடிகர்களுக்கான சம்பளத்திற்கே அதிகப்படியான பொருட்செலவை தயாரிப்பு நிறுவனம் செய்துள்ளது. கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸூடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், உலக நாயகன் கமல் ஹாசன், அதிரடிக்கு பெயர்போன நடிகை தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகின்றார்.

மிரட்டிவிடும் தீபிகாவின் போஸ்டர்
சில தினங்களுக்கு முன்னர் அமிதாப் பச்சனின் மிரட்டலான புகைப்படத்தை வெளியிட்ட படக்குழுவுக்கு இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வந்தது. இந்நிலையில் இன்று அதாவது, ஜூன் 9ஆம் தேதி தீபிகா படுகோனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் தீபிகா படுகோன் போர் வீராங்கனையைப் போலவும் ஏதோ ஒரு பெரும் ஏக்கத்தில் இருந்து வெளிவந்ததைப் போன்ற முக பாவத்துடனும் காணப்படுகின்றார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
கதைக்கு முக்கியமான கதாபாத்திரம்
குறிப்பாக தீபிகா படுகோனின் ரசிகர்கள் இந்த போஸ்டரைக் கொண்டு இணையத்தை அலறவிட்டுக்கொண்டு உள்ளனர். நாளை ட்ரைலர் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு தீபிகாவின் போஸ்டரை வெளியிட்டு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. வழக்கமாக ஒரு படத்தின் கதாநாயகி என்றால் கதைக்கு முக்கியத்துவம் இல்லாத கதாப்பாத்திரமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த போஸ்டரைப் பார்க்கையில் தீபிகா படுகோனுக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது தெளிவாகின்றது.
27ஆம் தேதி படம் ரிலீஸ்
ஏற்கனவே படக்குழு அறிவித்தபடி நாளை அதாவது ஜூன் 10ஆம் தேதி படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் நாளை எந்த நேரத்தில் ரிலீஸ் ஆகும் என்பதை படக்குழு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடவில்லை. அதேபோல், படம் வரும் 27ஆம் தேதி ரிலீசாகவுள்ளது என தெரிவித்திருந்தது.
வில்லன் கமல்
கல்கி 2898 ஏ.டி திரைப்படத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தில் கமல் ஹாசன் 19 நிமிடங்களும் இரண்டாம் பாகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமும் வரவுள்ள தகவல் அண்மையில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக உலா வந்தது. இந்தகவல் கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது மட்டும் இல்லாமல், இந்தியன் 2 படம் ஜீலை மாதம் 12ஆம் தேதி ரிலீசாகவுள்ள தகவலும் கமல் ரசிகர்களை கொண்டாட்ட மழையில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











