டாப் கியரில் புரமோஷன்.. குவியும் கல்கி பட அப்டேட்கள்.. ஷோபனாவிற்கு என்ன ரோல் தெரியுமா?
சென்னை: பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் வரும் ஜூன் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. நடிகர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய அளவுக்கு வசூல் வேட்டை நடத்தியே தீர வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளது.
ஆனால், இதுவரை பெரிய அளவில் புரமோஷன் ஏதும் செய்யவில்லை என பிரபாஸ் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில், மும்பையில் இன்று மாலை 6:00 மணி முதல் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

மேலும், கல்கி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஷோபனாவின் கதாபாத்திரத்தின் பெயரையும் தற்போது ரிவீல் செய்துள்ளனர். கடைசியிலிருந்து நெருங்கிவிட்ட நிலையில் படத்தின் புரமோஷனை பரபரப்பாக படக்குன்னு நடத்தி வருகிறது.
சலார் தந்த வெற்றி: பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த படங்கள் படுதோல்வியை சந்தித்தன. சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையிலும், அந்த படங்கள் ரசிகர்களை கவரவில்லை. ஆனாலும், தொடர்ந்து பிரபாஸை நம்பி பல நூறு கோடிகள் கொட்ட தயாரிப்பாளர்கள் தயாராக இருந்த நிலையில் சலார் திரைப்படம் 700 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
கல்கி கை கொடுக்குமா?: புராணத்தையும் எதிர்காலத்தையும் ஒன்றிணைத்து கற்பனையாக கல்கி அவதாரம் உருவானால் எப்படி இருக்கும் என்பதை மையப்படுத்தி பிரபாஸை வைத்து கல்கி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின். அவரது கற்பனை மற்றும் பிரம்மாண்ட காஸ்டிங் மற்றும் ஹாலிவுட் தரத்திலான மேக்கிங் கல்கி படத்தை காப்பாற்றும் என்று பார்க்கப்படுகிறது.

ஷோபனா கதாபாத்திரம்: மலையாள நடிகையான ஷோபனா தென்னிந்திய படங்களில் அதிகம் நடித்துள்ளார். தளபதி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ள ஷோபனா தற்போது கல்கி 2898 ஏடி படத்தில் மரியம் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்து புராணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கதாபாத்திரத்தில் கிறிஸ்துவ பெயர் இடம்பெற்றிருப்பது ஏன் என்கிற கேள்விகள் ரசிகர்களை படத்தின் மீதான எதிர்பார்த்தல் மேலும் கூட்டுகிறது.
மும்பையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி: கல்கி படத்துக்கு கடைசி நேரம் வரை பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில், அந்த ரசிகர்களை கவர் செய்தால் தான் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த முடியும் என நினைத்த படக்குழுவினர் தற்போது மும்பையில் இன்று மாலை கல்கி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட படக் குழுவினர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்ப்பமாக உள்ள தீபிகா படுகோன் கலந்து கொள்வாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதே போல தமிழ்நாட்டிலும் ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில் படத்தின் சென்சார் நிறைவடைந்து விட்டதாகவும் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நிச்சயம் இந்த படம் பிரபாஸுக்கு பெரிய படமாக அமையும் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications