தேர்தலில் போட்டியிடப்போவதில்லை.. மநீம தலைவர் கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில், பேட்டரி டார்ச் சின்னத்தில் மட்டும் தான் போட்டியிடுவது என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தீர்க்கமான நிலைப்பாடு. பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகள் எனக்கு முக்கியம்.
இந்தச் சூழ்நிலையை நாங்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளும் காரணத்தால், தமிழக மக்களின் நலன் கருதியும், மதவாத சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து தமிழகத்தைக் காக்கும் கடமையினை உணர்ந்தும், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்கிற முடிவை திறந்த மனதுடன், தெளிந்த உள்ளத்துடனும் அறிவிக்கிறோம்.

எந்த சுயநலமின்றி, என்னோடு தொடர்ந்து பயணிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முடிவு உங்கள் உணர்வுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும் நான் செலுத்தும் மரியாதை.
அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது. அரசியலில் முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. மண்ணுக்கான, மக்களுக்கான, மொழிக்கான நமது போராட்டம் எப்போதும்போல் தீரத்துடன் தொடரும் என அறிவித்துள்ளார்.
திமுகவுடன் பல கட்சிகள் கூட்டணிக்கு சேர்ந்துள்ள நிலையில், அவர்களுக்கான தொகுதிகளை பங்கிடுவதில் பெரிய சிக்கல் நிலவி வந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் எடுத்துள்ள இந்த முடிவு திமுகவுக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் மிகப்பெரிய துணையாக இருக்கும் என்கின்றனர்.
கமல்ஹாசனின் இந்த முடிவுக்கு ஆதரவுகளும் விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.
தவெக தலைவர் விஜய் இந்த தேர்தலில் போட்டியிட்டு எத்தனை சீட்டுகள் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அவருக்கு போட்டியாக கமல் கட்சி களமிறங்குமா? என்கிற கேள்விகள் நிலவிய நிலையில், தற்போது கமல் முடிவு பல விவாதங்களையும் கிளப்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











